சண்டிகர்: இந்திய கிரிக்கெட்டின் அடுத்த தலைமுறை அதிரடி வீரர்களான அபிஷேக் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோரின் வளர்ச்சிக்குப் பின்னால் ஒரு முக்கிய சக்தியாக இருக்கும் யுவராஜ் சிங், தனது பயிற்சி முறை மற்றும் அனுபவங்கள் குறித்து மனம்திறந்து பேசியுள்ளார்.
இது பற்றி பேசுகையில், "நான் 19 வயதில் இருந்தபோது, நான் எதிர்கொண்ட சவால்களை யாரும் புரிந்து கொள்ளவில்லை. இப்போது, நான் 19 அல்லது 20 வயது வீரரைப் பார்க்கும்போது, அவர்கள் என்னென்ன சூழ்நிலைகளைக் கடந்து செல்கிறார்கள் என்பதை என்னால் துல்லியமாகப் புரிந்துகொள்ள முடிகிறது" என்று யுவராஜ் சிங் கூறினார்.

அபிஷேக் சர்மாவின் சமீபத்திய அசுரத்தனமான வளர்ச்சி குறித்துப் பேசிய யுவராஜ், "நீங்கள் கடந்த 8-9 மாதங்களாகத்தான் இதைப் பார்க்கிறீர்கள். ஆனால், அபிஷேக் கடந்த நான்கு முதல் ஐந்து ஆண்டுகளாகத் தனது ஆட்டத்தில் கடுமையாக உழைத்து வருகிறார்" என்று குறிப்பிட்டார்.
"ஆரம்பத்தில், எனது ஓய்வுக் காலத்தில், அபிஷேக் மற்றும் சுப்மன் ஆகியோருடன் எனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதாகவே இருந்தது. ஆனால், அபிஷேக்குடன் பல ஆண்டுகளாகப் பணியாற்றியது, ஒரு பயிற்சியாளராக அல்லது ஒரு வழிகாட்டியாக என்ன செய்ய வேண்டும் என்பதை எனக்கே புரிய வைத்துள்ளது. அபிஷேக் வெளிப்படுத்திய கடின உழைப்பு, பல ஆண்டு கால உழைப்பின் பலன். அதன் முடிவுகள் இப்போது தெரியத் தொடங்கியுள்ளன" என்றார்.
கோவிட்-19 ஊரடங்கின் போது, அபிஷேக் மற்றும் சுப்மன் இருவரும் சண்டிகரில் உள்ள யுவராஜின் வீட்டில் தங்கி, அவரின் மேற்பார்வையில் கடுமையான பயிற்சி பெற்றனர். இருப்பினும், தனது பயிற்சி முறை, தனது தந்தையும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான யோக்ராஜ் சிங்கின் "கடுமையான பயிற்சி" முறையிலிருந்து முற்றிலும் மாறுபட்டது என்று யுவராஜ் சிங் கூறினார்.
"நான் நிச்சயமாக என் தந்தை யோக்ராஜ் சிங் போல் இல்லை. எனது பயிற்சி முறை முற்றிலும் வித்தியாசமானது," என்று கூறிய அவர், "நீங்கள் ஒருவருக்குப் பயிற்சி அளிக்கும்போது அல்லது வழிகாட்டும் போது, என்ன செய்ய வேண்டும் என்று அவர்களுக்குக் கட்டளையிடுவதை விட, அவர்களின் இடத்தில் இருந்து அவர்களின் மனநிலையைப் புரிந்துகொள்வது அவசியம். அது ஒரு தள்ளுதல் மற்றும் இழுத்தல் (Push and Pull) போல இருக்க வேண்டும்" என்று விளக்கினார்.
அபிஷேக் சர்மாவின் பயமற்ற அதிரடி ஆட்டத்திற்கு, இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அளிக்கும் ஆதரவே முக்கியக் காரணம் என்றும் யுவராஜ் பாராட்டினார்.
"பயமின்றி விளையாடும் சுதந்திரம், பயிற்சியாளர் மற்றும் கேப்டனின் ஆதரவிலிருந்துதான் வருகிறது. அவர்கள் உங்களை சுதந்திரமாக உங்கள் இயல்பான ஆட்டத்தை விளையாட அனுமதிக்கும்போது, அது உங்களுக்கு நம்பிக்கையை அளிக்கிறது. நானும் அப்படித்தான் வந்தேன்" என்றார்.
தனது கிரிக்கெட் வாழ்க்கையின் உச்சக்கட்டத்தை நினைவு கூர்ந்த யுவராஜ், 2011-ல் இந்தியா உலகக்கோப்பையை வென்றபோது பயிற்சியாளராக இருந்த கேரி கிர்ஸ்டனை உதாரணமாகக் குறிப்பிட்டார். "கேரி பயிற்சியாளராக இருந்தபோது, 'நீ உனது இயல்பான ஆட்டத்தை விளையாடினால், இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வாய்' என்று என்னிடம் எப்போதும் சொல்வார்.
அதே விஷயத்தைத்தான் கௌதம் மற்றும் சூர்யகுமார், அபிஷேக்கிடம் சொல்லியிருக்கிறார்கள் - 'போய் உன் ஆட்டத்தை விளையாடு, பத்தில் ஆறு போட்டிகளில் நீயே வெற்றியைத் தேடித் தருவாய்' என்று. அபிஷேக்கும் அதையேதான் செய்து கொண்டிருக்கிறார்" என்று யுவராஜ் பெருமிதத்துடன் கூறினார்.