"உயிரே போனாலும் பரவாயில்லை".. டெஸ்ட் வாய்ப்புக்காக 7 ஆண்டு காத்திருந்த யுவராஜ் சிங்.. உருக்கம்
மும்பை: இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் தனக்கான நிரந்தர இடத்தை பிடிக்க 7 ஆண்டுகள் காத்திருந்ததாகவும், அதற்காக உயிரை பணயம் வைக்கவும் தான் தயாராக இருந்ததாகவும் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங் உருக்கமாக தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய யுவராஜ் சிங், தனது கிரிக்கெட் பயணம், புற்றுநோய் பாதிப்பு மற்றும் அதிலிருந்து மீண்டு வந்த அனுபவங்கள் குறித்து பல்வேறு தகவல்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது:
இந்திய ஒருநாள் அணியில் கடந்த 2000ல் நான் அறிமுகமானேன். ஆனால், டெஸ்ட் அணியில் எனக்கு உடனடியாக நிரந்தர இடம் கிடைக்கவில்லை. இதற்காக சுமார் 7 ஆண்டுகள் நான் காத்திருக்க வேண்டி இருந்தது. பின்னர் கடந்த 2008ல் சவுரவ் கங்குலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். அப்போது மிடில் ஆர்டரில் ஒரு இடதுகை பேட்ஸ்மேனுக்கான தேவை அணியில் ஏற்பட்டது. அதன்மூலம் அந்த இடம் எனக்கு கிடைத்தது.

அந்த காலகட்டத்தில் வெஸ்ட் இண்டீசில் 2 மாதங்கள் மற்றும் இங்கிலாந்தில் 2.5 மாதங்கள் என அடுத்தடுத்து நீண்ட தொடர்களில் விளையாட வேண்டிய நிலை இருந்தது. டெஸ்ட் அணியில் அந்த இடத்தை எப்படியாவது தக்கவைக்க வேண்டும் என்பதற்காக, உயிரே போனாலும் பரவாயில்லை என நினைத்து கடுமையான வலிகளுக்கிடையே விளையாடினேன்.
ஒரு விளையாட்டு வீரராக எப்போதுமே உடல்நலக்குறைவை காரணம் காட்டி நாம் பின்வாங்க முடியாது. இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பதே எனது ஒரே நோக்கமாக இருந்தது. இந்த போராட்டத்திற்கு இடையே எனக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ஆனால் கிரிக்கெட் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருந்த போதே எனது உடல்நிலை மேலும் மேலும் மோசமடையத் தொடங்கியது.
இதையடுத்து எனது மருத்துவரும் நெருங்கிய நண்பருமான டாக்டர் நிதேஷ் ரோஹத்கி எனது மருத்துவ பரிசோதனை முடிவுகளைப் பார்த்தார். இதயம் மற்றும் நுரையீரலுக்கு இடையே முக்கிய சுவாசக் குழாயின் மீது புற்றுநோய் கட்டி இருப்பதை அவர் உறுதி செய்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்ற அதீத ஆர்வத்தால், ஆரம்பத்தில் எனது உடல்நலத்தை நான் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. இவ்வாறு யுவராஜ் சிங் உருக்கமாக பேசினார்.
புற்றுநோயை துணிச்சலாக போராடி வென்ற யுவராஜ் சிங், இந்திய அணிக்காக மொத்தம் 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். இதில் 3 சதங்கள் உட்பட 1900 ரன்களை 34 என்ற சராசரியில் குவித்துள்ளார். மேலும் பந்துவீச்சில் 9 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications