Yuvraj Singh: "மரியாதை இல்லை.. ஆதரவும் கிடைக்கல".. கிரிக்கெட்டை வெறுத்தது ஏன்? யுவராஜ் சிங் உருக்கம்
சண்டிகர்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரரும், 2011 உலகக்கோப்பை நாயகனுமான யுவராஜ் சிங், தனது கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதி நாட்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா உடனான ஒரு கலந்துரையாடலில், தான் ஏன் கிரிக்கெட்டில் இருந்து விலகினேன் என்பது குறித்து அவர் உருக்கமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
யுவராஜ் சிங் பேசுகையில், ஒரு கட்டத்தில் கிரிக்கெட் விளையாடுவதில் தனக்கு இருந்த ஆர்வம் மற்றும் மகிழ்ச்சி முழுமையாக வடிந்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "நான் விளையாட்டை ரசிப்பதை நிறுத்திவிட்டேன். எனக்குப் பிடிக்காத ஒரு விஷயத்தை நான் ஏன் செய்ய வேண்டும் என்ற கேள்வி எனக்குள் எழுந்தது" என்று கூறினார்.

மரியாதை இல்லை
தொடர்ந்து பேசிய அவர், "அணியில் எனக்கு உரிய ஆதரவு கிடைக்கவில்லை என்று உணர்ந்தேன். அதேபோல் எனக்குப் போதிய மரியாதை இல்லை என்றும் தோன்றியது. மரியாதை மற்றும் ஆதரவு இல்லாத இடத்தில் நான் ஏன் இருக்க வேண்டும்? யாருக்காக, எதை நிரூபிப்பதற்காக நான் விளையாட வேண்டும்?
மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் நான் மிகவும் சோர்வடைந்திருந்தேன். அது எனக்கு மிகுந்த வலியைத் தந்தது. ஆனால், என்று நான் கிரிக்கெட்டை விட்டு விலகினேனோ, அன்றுதான் நான் மீண்டும் பழைய யுவராஜாக, நானாக உணர்ந்தேன்" என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
சிறு வயது சம்பவம்
இதே உரையாடலில் தனது 13 வயதில் நடந்த சம்பவம் குறித்தும் அவர் நினைவு கூர்ந்தார். சிறு வயதில் அவரது திறமை குறித்து ஒருவர் சந்தேகம் எழுப்பியபோது, அதைத் தனது தந்தை மிகவும் தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொண்டதாக அவர் கூறினார்.
"அப்போது அந்த நபர் என்னைச் சரியாகக் கவனிக்க நேரம் ஒதுக்கவில்லை என்று இப்போது தோன்றுகிறது. ஆனால் அந்த விமர்சனத்தை என் தந்தை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டார். நான் அப்போது விளையாட்டைப் புரிந்துகொள்ளும் வயதில்தான் இருந்தேன்" என்று யுவராஜ் சிங் தெரிவித்தார்.
ரசிகர்கள் மைதானத்தில் வீரர்களின் ஆட்டத்தை மட்டுமே பார்க்கிறார்கள். ஆனால், அதற்குப் பின்னால் அவர்கள் அனுபவிக்கும் மன உளைச்சல் மற்றும் வலி ஆகியவற்றை யுவராஜ் சிங்கின் இந்த வெளிப்படையான பேச்சு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.


Click it and Unblock the Notifications