“யுவராஜ்.. உங்களுக்கு இந்திய அணியில் இடம் இல்லை”.. விராட் கோலி மறைத்த உண்மையை சொன்ன தோனி!
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் யுவராஜ் சிங், தனது ஓய்வு முடிவுக்குக் காரணமான கசப்பான சம்பவங்கள் குறித்து நீண்ட நாட்களுக்குப் பிறகு வெளிப்படையாக மனம் திறந்துள்ளார். தனது 17 வருட கிரிக்கெட் பயணத்தின் முடிவில் தனக்கு உரிய மரியாதை வழங்கப்படவில்லை என்றும், அப்போதைய கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் தனது எதிர்காலம் குறித்து எந்த ஒரு தெளிவான விளக்கமும் அளிக்கவில்லை என்றும், தோனி தான் உண்மையை சொன்னார் என அவர் கூறி இருக்கிறார்.
2011 உலகக்கோப்பை நாயகனான யுவராஜ் சிங், கடைசியாக 2017ஆம் ஆண்டு தான் இந்திய அணிக்காக விளையாடினார். அதன் பிறகு 2019 உலகக்கோப்பைக்கான அணியைக் கட்டமைக்கும் பணியில் அவர் ஓரம் கட்டப்பட்டார். இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர், தனது தலைமுறையைச் சேர்ந்த பல முன்னணி வீரர்களுக்கும் இதே நிலைமைதான் ஏற்பட்டது என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

"ஜாகீர் கான், ஹர்பஜன் சிங், வீரேந்திர சேவாக் என யாருக்கும் தங்களது எதிர்காலம் குறித்த தெளிவான விளக்கம் கொடுக்கப்படவில்லை. என்னைப் பொறுத்தவரை தேசிய கிரிக்கெட் அகாடமியோ, கேப்டன் விராட் கோலியோ அல்லது பயிற்சியாளர் ரவி சாஸ்திரியோ எனக்கு எந்த விளக்கமும் அளிக்கவில்லை. எனக்கு 36 வயது ஆகிவிட்டதால் அடுத்து என்ன செய்வது எனத் தெரியாமல் தவித்தேன். நாட்டுக்காக இவ்வளவு ஆண்டுகள் விளையாடிய எனக்கு குறைந்தபட்ச மரியாதை கூட கிடைக்கவில்லை" என யுவராஜ் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
கேப்டன் மற்றும் பயிற்சியாளரிடமிருந்து எந்த பதிலும் வராததால், இறுதியாக முன்னாள் கேப்டன் தோனியைத் தான் தொடர்புகொண்டதாக அவர் தெரிவித்துள்ளார். "நான் எம்.எஸ் தோனியை தொலைபேசியில் அழைத்துப் பேசினேன். அவர் தான் நிலைமையை எனக்குத் தெளிவாக விளக்கினார். 2019 உலகக்கோப்பைக்கான அணியில் எனக்கு இடமில்லை என்பதை அவர் நேரடியாகவே என்னிடம் கூறிவிட்டார். அப்போது அவர் கேப்டனாக இல்லை என்றாலும் உண்மையைச் சொன்னார். அதன் பிறகுதான் எனக்கு ஒரு தெளிவு கிடைத்தது" என்றார்.
மேலும், உடற்தகுதி தொடர்பான பிரச்சனையை வைத்து தன்னை ஓய்வுபெறச் சொன்னதாகவும் அவர் அதிரடியாகக் கூறியுள்ளார். "உடற்தகுதி தேர்வில் நான் தேர்ச்சி பெற மாட்டேன் என்பதால் என்னை ஓய்வு பெறச் சொன்னார்கள். ஆனால், ஓய்வு பெறுவது எனது தனிப்பட்ட முடிவு என அவர்களிடம் கூறினேன். அதன்பிறகு அந்த உடற்தகுதி தேர்விலும் நான் தேர்ச்சி பெற்றுக் காட்டினேன். என்னை அணியில் எடுப்பதா வேண்டாமா என்பதை நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள் என அவர்களிடம் கூறிவிட்டேன்" என்று யுவராஜ் சிங் ஆவேசமாகக் கூறினார்.
இந்திய கிரிக்கெட்டிற்கு மிகப்பெரிய பங்களிப்பை வழங்கிய ஒரு ஜாம்பவானுக்கு நடந்த இந்த கசப்பான சம்பவம் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications