பிர்மிங்காம்: உலக லெஜெண்ட் சாம்பியன்ஷிப் டி20 தொடரில் இந்தியா சாம்பியன்ஸ் அணியில் இடம் பெற்று இருந்த முன்னாள் வீரர்களான யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா ஆகியோர் சமீபத்தில் வெளியான ஹிந்தி திரைப்பட "தோபா, தோபா" என்ற பாடலுக்கு வேடிக்கையாக நடனமாடி வீடியோ வெளியிட்டு இருந்தனர். அதில் அவர்கள் நடப்பதில் சிரமம் உள்ள மாற்றுத் திறனாளிகளை கிண்டல் செய்யும் வகையில் நடனம் ஆடி இருப்பதாக மாற்றுத்திறனாளிகள் சமூகம் கொந்தளித்து இருக்கிறது.
மாற்று திறன் கொண்ட விளையாட்டு வீரர்கள், இந்திய பாராலிம்பிக் சங்கம் ஆகியோர் கடும் கண்டனங்களை தெரிவித்து உள்ளனர். மாற்றுத் திறனாளிகளை கிண்டல் செய்யும் வகையில் இருக்கும் அந்த வீடியோவை உடனடியாக நீக்க வேண்டும் என்றும், அதில் இடம் பெற்ற முன்னாள் வீரர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.

ஓய்வு பெற்ற வீரர்களுக்கான உலக லெஜன்ட் சாம்பியன்ஷிப் டி20 தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது. அதில் இந்தியா சாம்பியன்ஸ் என்ற அணியின் பெயரில் இந்தியாவின் முன்னாள் வீரர்கள் ஆன யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா, ராபின் உத்தப்பா, அம்பத்தி ராயுடு, இர்பான் பதான், யூசுப் பதான் மற்றும் பலர் பங்கேற்றனர். இந்த அணி இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணியை வீழ்த்தி கோப்பையையும் வென்றது.
இந்த நிலையில், இந்த தொடரில் 15 நாட்கள் இடைவெளியில் ஏழு போட்டிகளில் அந்த முன்னாள் வீரர்கள் விளையாடிருந்தனர். அதனால், தாங்கள் மிகவும் சோர்வுற்று இருப்பதாகவும், உடலில் பல இடங்களில் வலி இருப்பதாகவும் சுட்டிக்காட்டுவதற்காக பாலிவுட் பாடலான "தோபா, தோபா" என்ற பாடலுக்கு வேடிக்கையாக நடனமாடும் எண்ணத்தில், கால்களை இழுத்து, இழுத்து நடந்து சென்றனர்.
தங்கள் கால்களை கடுமையான வலி இருப்பதாக சுட்டிக்காட்டவே இந்த நடனத்தை அவர்கள் ஆடி இருந்தாலும் இது நடப்பதில் சிரமம் உள்ள மாற்றுத்திறனாளிகளை கிண்டல் செய்யும் வகையில் இருப்பதாக மாற்றுத் திறன் கொண்ட நீச்சல் வீரர் ஷாமாஸ் ஆலம் கடுமையாக விமர்சித்து இருக்கிறார். அவரது பதிவில், இது முட்டாள்தனமாகவும், ஏற்க முடியாத அளவுக்கு இருப்பதாகவும், இந்த பதிவு இந்தியாவில் உள்ள 120 கோடி மக்களையும் சென்றடையும் முன் நீக்க வேண்டும் எனவும் கூறி இருக்கிறார்.
பாராலிம்பிக் சங்கம் இது குறித்து கூறுகையில், "இந்த நடத்தை அவமானமாகவும், அறிவற்ற வகையிலும் உள்ளது. நட்சத்திர கிரிக்கெட் வீரராக இருக்கும் உங்களுக்கு பொறுப்புணர்வு இருக்க வேண்டும். நீங்கள் மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டும். ஆனால், மாற்றுத் திறனாளிகளை போல நடந்து செல்வதும், கேவலமான முறையில் சைகை செய்வதும், அவர்களால் செய்ய முடியாத விஷயங்களை செய்து காட்டி சிரிப்பதும் நகைச்சுவை அல்ல. இது அவர்களை அவமானப்படுத்துவதாகும். இதற்காக நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று கூறி உள்ளது.