மும்பை : இந்திய அணித் தேர்வில் கேப்டன் ரோஹித் சர்மா செய்த தவறை சுட்டிக் காட்டி இருக்கிறார் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்.
2023 உலகக்கோப்பை தொடர் இன்னும் சில தினங்களில் துவங்க உள்ளது. தற்போது பயிற்சிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், ரோஹித் சர்மா அணித் தேர்வில் செய்த தவறை சுட்டிக் காட்டி இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் யுவராஜ் சிங்.

சாஹல் நீக்கம் : இந்திய அணியில் சிறந்த ஸ்பின்னராக செயல்பட்டு வந்தார் சாஹல். கடந்த ஐபிஎல் தொடரிலும் கூட அதிக விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். இந்திய சூழ்நிலைகளில் அவர் சிறப்பாக பந்து வீசி வருகிறார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனாலும், அவரை உலகக்கோப்பை அணியில் புறக்கணித்து இருக்கிறது இந்திய அணி நிர்வாகம்.
சிறந்த ஸ்பின்னர் : தற்போது அணியில் முக்கிய ஸ்பின்னராக குல்தீப் யாதவ் மற்றும் ஜடேஜா உள்ளனர். அவர்களுக்கு எந்த வகையிலும் குறை சொல்ல முடியாத அளவுக்கு தான் சாஹல் செயல்பாடு உள்ளது. அதை சுட்டிக் காட்டி உள்ள யுவராஜ் சிங், அவரை அணியில் தேர்வு செய்யாதது பெரிய தவறாக இருக்கும் என கூறி உள்ளார்.
என்ன சொன்னார் யுவராஜ் சிங்? : "யுஸ்வேந்திர சாஹலை அணியில் இருந்து நீக்குவது தவறான முடிவாக இருக்கிறது. கவலையளிக்கும் முடிவாக உள்ளது. குறைந்தபட்சம் அவரை அணியில் மாற்று வீரராக வைத்திருந்திருக்கலாம். ஒரு லெக் ஸ்பின்னர் (குல்தீப்) உங்களுக்காக எப்போதும் விக்கெட்டுகளை வீழ்த்துபவர். குல்தீப் அற்புதமாக செயல்பட்டு வருகிறார். ஆனால் சாஹல் டர்னிங் டிராக்குகளிலும், மெதுவான பிட்ச்களிலும் ஆபத்தானவராக இருக்கக் கூடியவர். ஹர்திக் மூன்றாவது வேகப் பந்துவீச்சாளரின் தேவையை பூர்த்தி செய்யும் நிலையில், யுஸ்வேந்திர சாஹலை அணியில் தேர்ந்தெடுத்திருக்கலாம்," என்று கூறினார் யுவராஜ் சிங்.
உலகக்கோப்பை வெல்ல உத்தரவாதம் இல்லை : ஹர்திக் பாண்டியா இருப்பதால் மூன்றாவது வேகப் பந்துவீச்சாளர் அணிக்கு தேவை இல்லை. அதற்கு பதிலாக சாஹலை ஆட வைக்கலாம் என்பதே யுவராஜ் சிங்கின் கருத்தாக உள்ளது. மேலும், அவர், "ஆசியக் கோப்பையை வெல்வதால் உலகக் கோப்பையை வெல்வதற்கான எந்த உத்தரவாதமும் இல்லை. இருப்பினும், இந்தியா நல்ல ஃபார்மில் இருப்பதையே இது காட்டுகிறது" என இந்தியாவுக்கு எச்சரிக்கை ஒன்றையும் கொடுத்துள்ளார் யுவராஜ்,