ஹரியானா: கடும் பேச்சுகளுக்கும், கம்பீரமான தோற்றத்திற்கும் பெயர் பெற்றவரும், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், உலகக் கோப்பை நாயகன் யுவராஜ் சிங்கின் தந்தையுமான யோக்ராஜ் சிங், தனது தனிமைப் போராட்டம் குறித்து மனம் திறந்து பேசி, கண்ணீர் விட்டுள்ளார். "நான் இறப்பதற்குத் தயாராக இருக்கிறேன், என் வாழ்க்கையில் இனி எதுவும் மிச்சமில்லை" என்று அவர் கூறியிருப்பது, கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தனது முரட்டுத்தனமான கருத்துக்களுக்காக அறியப்பட்ட யோக்ராஜ் சிங், ஒரு தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த சமீபத்திய பேட்டியில், தனது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் உடைந்து பேசினார்.
தனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட குழப்பங்கள் இரகசியமல்ல என்று கூறிய யோக்ராஜ் சிங், "என் வாழ்க்கையின் மிகப்பெரிய அதிர்ச்சி, என் முதல் மனைவி ஷப்னமும், மகன் யுவராஜும் என்னை விட்டுப் பிரிந்ததுதான்" என்று வேதனையுடன் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், "யாருக்காக என் இளமை முழுவதையும், என் வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணித்தேனோ, அவர்களே என்னை விட்டுப் பிரிந்து செல்ல முடியுமா? என்று நான் உடைந்து போனேன். பல விஷயங்கள் சிதைந்து போயின. நான் எல்லோருக்கும் நல்லது மட்டுமே செய்தும், எனக்கு ஏன் இப்படி நடக்கிறது என்று கடவுளிடம் கேட்டேன். நான் சில தவறுகள் செய்திருக்கலாம், ஆனால் நான் ஒரு அப்பாவி; யாருக்கும் கெடுதல் செய்யவில்லை. கடவுள் முன் அழுதேன், அவர்தான் அந்தக் கடலில் இருந்து என்னைக் கரை சேர்த்தார்" என்றார்.
முதல் திருமணத்தின் பிரிவு தந்த வலியிலிருந்து மீண்டு, பின்னர் இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாகவும், ஆனால் அந்த உறவும் தன்னை மீண்டும் தனிமையில் தள்ளியதாகவும் யோக்ராஜ் சிங் குறிப்பிட்டார். "அது கடவுளின் விளையாட்டு, எனக்கான விதி. எனக்குள் கோபமும், பழிவாங்கும் உணர்வும் அதிகமாக இருந்தது. பின்னர் கிரிக்கெட் என் வாழ்வில் வந்தது, அதுவும் நின்றது. யுவராஜை கிரிக்கெட் ஆட வைத்தேன், அவனும் விளையாடிவிட்டுச் சென்றுவிட்டான்."
"பின்னர், நான் இரண்டாவது திருமணம் செய்துகொண்டேன். அந்தத் திருமணத்தின் மூலம் பிறந்த இரண்டு குழந்தைகளும் வளர்ந்து அமெரிக்காவுக்குச் சென்றுவிட்டனர். சில படங்களும் வெளியாகி, காலம் ஓடி, வாழ்க்கை மீண்டும் நான் தப்பித்து வந்த அதே புள்ளிக்கு என்னைக் கொண்டு வந்து நிறுத்தியது. 'இதையெல்லாம் நான் எதற்காகச் செய்தேன்? இப்போது உன்னுடன் யார் இருக்கிறார்கள்?' என்று எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். இது எனக்கு நடந்திருக்க வேண்டியதுதான், நல்லதுக்கே நடந்தது" என்று அவர் தத்துவார்த்தமாக கூறினார்.
"மாலையில் நான் தனியாகவே அமர்ந்திருக்கிறேன். வீட்டில் யாருமில்லை. சாப்பாட்டிற்காக அந்நியர்களை நம்பியிருக்கிறேன். சில சமயம் ஒருவர், சில சமயம் மற்றொருவர் உணவு தருகிறார்கள். நான் யாரையும் தொந்தரவு செய்வதில்லை. எனக்குப் பசித்தால் யாராவது உணவு கொண்டு வந்து தருகிறார்கள். வீட்டு வேலைக்காரர்களையும், சமையல்காரர்களையும் வைத்திருந்தேன், அவர்களும் தங்கள் வேலையைச் செய்துவிட்டுச் சென்றுவிட்டனர்" என்று அவர் கூறினார்.
தனது பேட்டியின் முடிவில், "என் அம்மா, என் குழந்தைகள், மருமகள், பேரக்குழந்தைகள் என குடும்பத்தில் உள்ள அனைவரையும் நான் நேசிக்கிறேன். ஆனால், நான் யாரிடமும் எதையும் கேட்பதில்லை. நான் இறப்பதற்குத் தயாராக இருக்கிறேன். என் வாழ்க்கை நிறைவடைந்துவிட்டது. கடவுள் எப்போது விரும்புகிறாரோ, அப்போது என்னை தன்னுடன் அழைத்துச் செல்லலாம். கடவுளுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன், நான் வேண்டிக்கொண்டே இருக்கிறேன், அவர் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்" என்று அவர் உருக்கத்துடன் கூறினார்.