சாஹல் - தனஸ்ரீ வர்மா விவாகரத்து? இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை அழித்த இந்திய வீரர்.. முழு விவரம்!
மும்பை: இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் அவரின் மனைவி தனஸ்ரீ வர்மா இருவரும் விவாகரத்து செய்ய முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனை உறுதி செய்யும் வகையில் சாஹல் மற்றும் தனஸ்ரீ வர்மா இருவரும் ஒருவரை ஒருவர் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்வதை நிறுத்தியதோடு, புகைப்படங்களையும் அழித்துள்ளனர்.
அண்மையில் நடந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய அணிக்காக ஆடிய சாஹல் ரூ.18 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டார். ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் சாஹல் முதலிடத்தில் இருக்கிறார். இதனால் அவருக்கு கொடுக்கப்பட்ட தொகை சரியானதே என்று ரசிகர்கள் பலரும் வாழ்த்து கூறி வந்தனர்.

இந்த நிலையில் சாஹல் வாழ்க்கையில் மிகப்பெரிய சிக்கல் எழுந்துள்ளது. 2020ஆம் ஆண்டு இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் சாஹல் மருத்துவரான தனஸ்ரீ என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதனை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் தனஸ்ரீயை பின் தொடர்வோரின் எண்ணிக்கை அதிகரித்தது.
டான்சரான தனஸ்ரீ ரீல்ஸ் பதிவிடுவதை வழக்கமாக கொண்டவர். இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்ததற்கும் டான்ஸ் முக்கிய காரணமாக இருந்தது. கொரோனா பரவலின் போது, டான்ஸ் கற்க சென்ற போது தான் தனஸ்ரீயுடன் சாஹல் காதலில் விழுந்தார். பின்னர் குடும்பத்தினர், நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. இன்ஸ்டாகிராமில் பிரபலமான இவர், சில நிறுவனங்களுக்காக விளம்பரங்களும் செய்து வந்தார்.
தொடர்ச்சியாக மாடலிங்கிலும் ஈடுபட்டு வந்த தனஸ்ரீ, அடுத்தடுத்து கான்சர்ட்-களில் பாடகியாக அறிமுகமாகினார். இதன் உச்சமாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு தனஸ்ரீ-க்கு கிடைத்தது. பின்னர் அவர் மீதான மீடியா வெளிச்சம் அதிகரிக்க, தெலுங்கு சினிமாவில் சில படங்களில் நடிக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
இதனிடையே சாஹல் - தனஸ்ரீ இருவரும் விவாகரத்து செய்யப் போவதாக தகவல் வெளியாகி கொண்டே இருந்தது. தனஸ்ரீயின் நடவடிக்கைகளில் சாஹலுக்கு விருப்பம் இல்லை என்று கூறப்பட்டு வந்த நிலையில், பல்வேறு தருணங்களிலும் தனஸ்ரீ-க்கு ஆதரவாக சாஹல் பேசிய வீடியோக்கள் வெளியாகின.

ஆனால் 2023ஆம் ஆண்டிலேயே சாஹலின் பெயரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து தனஸ்ரீ நீக்கினார். இருப்பினும் விவாகரத்து செய்திகளை இருவரும் மறுத்து வந்தனர். இந்த நிலையில் சாஹல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "புதிய வாழ்க்கை லோடிங்" என்று சில மாதங்களுக்கு முன் பதிவிட்டார். தற்போது இன்ஸ்டாகிராமில் இருவரும் பின் தொடர்வதை நிறுத்தியதோடு, தாங்கள் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களையும் அழித்து வருகின்றனர்.
இதனால் சாஹல் - தனஸ்ரீ தம்பதியினர் விவாகரத்து செய்ய உள்ளது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இதுகுறித்து ஆங்கில பத்திரிகை ஒன்றில், சாஹல் - தனஸ்ரீ விவாகரத்து தவிர்க்க முடியாத நிலையில் உள்ளது. இன்னும் சில நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று இருவருக்கும் நெருக்கமானவர்கள் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இவர்களின் விவாகரத்துக்கான காரணம் குறித்து எந்த விவரங்களும் வெளியிடப்படவில்லை.


Click it and Unblock the Notifications