சாஹல் - தனஸ்ரீ விவாகரத்து: ஜீவனாம்சம் 60 கோடி இல்லை.. உண்மைத் தொகை இதுதான்.. வெளியான தகவல்
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் தனஸ்ரீ வர்மா ஆகியோருக்கு இடையேயான விவாகரத்து வழக்கில், அவர் ஜீவனாம்சமாக 60 கோடி ரூபாய் வழங்கியதாக பல்வேறு தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவின. ஆனால், தற்போது உண்மையான ஜீவனாம்சத் தொகை எவ்வளவு என்பது தெரிய வந்துள்ளது.
யுஸ்வேந்திர சாஹல், தனஸ்ரீ வர்மாவுக்கு 4.75 கோடி ரூபாய் மட்டுமே ஜீவனாம்சமாக வழங்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தொகை நீதிமன்றத்தில் முடிவு செய்யப்பட்டு, அதில் பாதித் தொகையை அவர் ஏற்கனவே செலுத்திவிட்டதாகவும் கூறப்படுகிறது. தற்போது அவர் 2.37 கோடி ரூபாயை தனஸ்ரீ வர்மாவுக்கு வழங்கியுள்ளார்.

அவர்களது விவாகரத்து வழக்கில் இன்னும் காத்திருப்புக் காலம் உள்ளது. அதனை ரத்து செய்யுமாறு அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர். இது தொடர்பான விசாரணையின்போது, சாஹல் மீதமுள்ள தொகையைச் செலுத்தாததால் அதனை ரத்து செய்ய முடியாது என்றும், அவர் எப்போது செலுத்துகிறாரோ அப்போது ரத்து செய்வது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஐபிஎல் தொடரில் விளையாட தயாராகி வரும் யுஸ்வேந்திர சாஹல், மீதமுள்ள ஜீவனாம்சத் தொகையையும் செலுத்தி இந்த வழக்கை விரைவில் முடிக்க முயற்சி செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் தங்கள் கற்பனைகளை வெளிப்படுத்தி, சாஹல் தனஸ்ரீக்கு 60 கோடி ரூபாய் ஜீவனாம்சம் அளிப்பதாகக் கூறினர். மேலும், அந்தப் பணம் தனஸ்ரீ வர்மாவுக்குத் தேவையில்லை என்றும் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்து வந்தனர். ஆனால் தற்போது அவை அனைத்தும் பொய்யான தகவல்கள் என்பது தெரியவந்துள்ளது.
யுஸ்வேந்திர சாஹல் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளார். அவருக்கு 18 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் பார்க்கும்போது, இது நியாயமான ஜீவனாம்சத் தொகையே என தற்போது பலரும் முந்தைய விமர்சனங்களுக்கு பதிலளித்து வருகின்றனர்.
செய்தி சுருக்கம்:
- இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் தனஸ்ரீ வர்மா ஆகியோரின் விவாகரத்து வழக்கில், சாஹல் 4.75 கோடி ரூபாய் ஜீவனாம்சமாக வழங்க உள்ளார்.
- இதில் பாதித் தொகை ஏற்கனவே செலுத்தப்பட்டுள்ளது.
- மீதமுள்ள தொகையை செலுத்தாததால் விவாகரத்து காத்திருப்புக் காலம் ரத்து செய்யப்படவில்லை.
- சாஹல் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாட உள்ளார்.


Click it and Unblock the Notifications