முல்லான்பூர்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் வெற்றி பெற முக்கிய காரணம் யுஸ்வேந்திர சாஹலின் அபாரமான பந்துவீச்சுதான். இந்த நிலையில் அவரது காதலி என சொல்லப்படும் ஆர்.ஜே. மாவாஷ் அது குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அது ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.
பலரும் அவர்கள் இருவரும் காதலில் இருப்பது இந்த பதிவின் மூலம் உறுதியாகிவிட்டது எனவும் சொல்லி வருகின்றனர். நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 15.3 ஓவர்களில் 111 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட் ஆனது. அடுத்ததாக பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றியை நோக்கி வேகமாக முன்னேறிக் கொண்டிருந்த நிலையில் யுஸ்வேந்திர சாஹல் மிகப்பெரிய திருப்பத்தை அளித்தார்.

அஜின்கியா ரஹானே, அங்ரிஷ் ரகுவன்ஷி, ரிங்கு சிங், ராமன்தீப்சிங் என வரிசையாக நான்கு முக்கிய பேட்ஸ்மேன்களை அவர் ஆட்டமிழக்க செய்தார். மற்ற பஞ்சாப் பந்துவீச்சாளர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி இடையே விக்கெட்களை வீழ்த்தினர். இதன் விளைவாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 95 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
நான்கு முக்கிய விக்கெட்களை வீழ்த்திய யுஸ்வேந்திர சாஹல் ஆட்ட நாயகன் விருதையும் வென்றார். இந்த நிலையில் அவரது காதலியாக சொல்லப்படும் ஆர்.ஜே. மாவாஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அதில் "என்ன ஒரு திறமையான மனிதர் இவர்! ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்தியதற்கு இதுவும் ஒரு காரணம்" என கூறியுள்ளார். ஐபிஎல் தொடரில் சாஹல் 166 போட்டிகளில் விளையாடி 211 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். மேலும் ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக விக்கெட்கள் வீழ்த்திய பந்துவீச்சாளரும் இவர் தான். ஐபிஎல் வரலாற்றில் 200 விக்கெட்டுகளுக்கும் அதிகமாக வீழ்த்திய ஒரே பந்துவீச்சாளரும் சாஹல் மட்டுமே.