ஜாகீர் கான், தோனியின் பார்ட்னர்ஷிப் சிஎஸ்கே அணியை உயரத்திற்கு கொண்டு செல்லும்.. EX வீரர் பாராட்டு
மும்பை: ஐபிஎல் 2027 சீசனுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து ஜாகீர் கானின் முன்னாள் சக வீரரான ஆகாஷ் சோப்ரா தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.
ஜாகீர் கான் சென்னை அணியுடன் ஒரு வருட ஒப்பந்தத்தில் இணைந்துள்ளார், மேலும் எதிர்காலத்தில் இந்த ஒப்பந்தம் நீட்டிக்கப்படவும் வாய்ப்புள்ளது. ஜாகீர் கான் முன்பு மும்பை இந்தியன்ஸ் அணியின் கிரிக்கெட் இயக்குநராக இருந்ததால், அவருக்கு நிர்வாகப் பணிகள் குறித்தும் நன்றாகத் தெரியும் என்றும், அவரே ஒரு வீரராக விளையாடியிருப்பதால் வீரர்களின் மீதான அழுத்தத்தை எளிதில் புரிந்துகொள்வார் என்றும் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா, "நிர்வாகத்தின் எதிர்பார்ப்புகளையும், அணியில் உள்ள வீரர்களின் அழுத்தத்தையும் நீங்கள் புரிந்து கொண்டால், உங்களால் மிகச் சிறப்பாகச் செயல்பட முடியும். அவரிடம் எனக்குப் பிடித்த மற்றொரு விஷயம் என்னவென்றால், அவர் எப்போதும் வீரர்களுக்கு ஆதரவாக நிற்பார். வீரர்களைத் துன்புறுத்தும் குணம் அவரிடம் இல்லை.
அவர் சென்னை அணியுடன் இணைந்து மிகச் சிறப்பாகச் செயல்படுவார் என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் அவருக்கு ஆட்டத்தின் நுணுக்கங்களும் கிரிக்கெட்டும் நன்றாகத் தெரியும். ஆட்டத்தின் தன்மை என்ன என்பதை அவர் துல்லியமாகப் புரிந்துகொள்கிறார். இரண்டாவதாக, சென்னை அணிக்கும் இப்படிப்பட்ட மனிதர்கள் தான் தேவை" என்று கூறியுள்ளார்.
"அவர் மனிதர்களைக் கையாளுவதில் சிறந்தவர். யாருக்கு அதிக நேரம் கொடுக்க வேண்டும், யாரை எப்படி வழிநடத்த வேண்டும் என்பது அவருக்குத் தெரியும். அவரிடம் சிறந்த பணி ஒழுக்கம் உள்ளது. ஒரு வீரர் கடினமாக உழைக்கத் தயாராக இருந்தால், ஜாகீர் அவருடன் இணைந்து களத்தில் நிற்கத் தயாராக இருப்பார்" என்று சோப்ரா விவரித்தார்.
2027 ஐபிஎல் தொடருக்குள் நுழையும் போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெரும் அழுத்தத்தில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 2023 இல் கோப்பையை வென்ற பிறகு, சிஎஸ்கே அணி 2024, 2025 மற்றும் 2026 ஆகிய ஆண்டுகளில் பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறத் தவறிவிட்டது. ஜாகீர் கானின் அமைதியான அணுகுமுறை சிஎஸ்கேவுக்கு பெரிதும் உதவும் என்று ஆகாஷ் சோப்ரா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
"அவர் முன்னால் வந்து புகழடைய விரும்புவதில்லை. பின்னணியில் இருந்து அமைதியாக உழைத்துக்கொண்டே இருப்பார். அவர் செயல்முறைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார். செயல்முறை தான் மஹி மற்றும் ஜாகீர் இருவரின் தத்துவமும் ஆகும். எனவே, இந்த கூட்டணி மிகவும் சிறப்பாக அமையும் என்று நான் நினைக்கிறேன்" என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications


