25 ஆண்டுகளுக்குப் பின் வரலாற்றுச் சாதனை.. வங்கதேசத்தை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்திய ஜிம்பாப்வே
ஹராரே: வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே அணி இன்னிங்ஸ் மற்றும் 85 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் கடந்த 25 ஆண்டுகளில் முதன்முறையாகத் தொடர்ந்து இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று ஜிம்பாப்வே புதிய சாதனை படைத்துள்ளது.
ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி அங்கு ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி தனது முதல் இன்னிங்ஸில் 140 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. தொடர்ந்து விளையாடிய ஜிம்பாப்வே அணி, தொடக்க வீரர் இன்னோசென்ட் காயாவின் சிறப்பான ஆட்டத்தால் தனது முதல் இன்னிங்ஸில் 410 ரன்கள் குவித்தது. காயா 227 பந்துகளில் 140 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதனால் முதல் இன்னிங்ஸில் ஜிம்பாப்வே 270 ரன்கள் முன்னிலை பெற்றது.

இதையடுத்து 270 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த வங்கதேசம், ஜிம்பாப்வே அணியின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் 185 ரன்களுக்கு சுருண்டது. வங்கதேச அணியில் முஷ்பிகுர் ரஹிம் 34 ரன்களும், சாண்டோ 30 ரன்களும் எடுத்து ஓரளவிற்குப் போராடினர். இவர்கள் இருவரும் இணைந்து 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
ஜிம்பாப்வே அணியின் பந்துவீச்சில் பிளெசிங் முசரபானி 4 விக்கெட்டுகளையும், கேப்டன் ரிச்சர்ட் ங்கரவா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி வெற்றியை எளிதாக்கினர். ஆட்டநாயகனாக இன்னோசென்ட் காயா தேர்வு செய்யப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் ஜிம்பாப்வே அணி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. இதற்கு முன்பு அக்டோபர் 2025-இல் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே வெற்றி பெற்றிருந்தது. தற்போது வங்கதேசத்தை வீழ்த்தியதன் மூலம், கடந்த 25 ஆண்டுகளில் முதல் முறையாகத் தொடர்ந்து இரண்டு டெஸ்ட் வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. இதற்கு முன்னதாக 1998-ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக ஜிம்பாப்வே அடுத்தடுத்து டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
