ஹராரே: நியூசிலாந்து வீரர் டெவோன் கான்வேயின் "அதிர்ஷ்டம் நிறைந்த" அரைசதத்தால், முத்தரப்பு டி20 தொடரில் ஜிம்பாப்வே அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வீழ்த்தியது. சிஎஸ்கே வீரரான டெவான் கான்வே அரைசதம் அடித்தாலும் பலமுறை அவுட் ஆகும் வாய்ப்பில் இருந்து தப்பி இருந்தார்.
கடந்த 17 மாதமாக அவர் டி20 போட்டிகளில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. அவர் சிஎஸ்கே அணிக்காக ஆடிய போதும், நியூசிலாந்து அணிக்காக ஆடிய போதும் திருப்திகரமான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அதனால் தான் அது அதிர்ஷ்டம் நிறைந்த அரைசதமாக மாறி இருக்கிறது.

ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்பில் நடந்த இந்தப் போட்டியில், டெவான் கான்வே மூன்று முறை ஆட்டமிழக்கும் வாய்ப்புகளில் இருந்து தப்பினார். அவர் 1 ரன்னில் இருந்தபோது கொடுக்கப்பட்ட கேட்ச்சை ஜிம்பாப்வே வீரர்கள் தவறவிட்டனர். பின்னர் 34 ரன்களில் இருந்தபோது ரன் அவுட் ஆகும் வாய்ப்பிலிருந்து தப்பினார். அதன்பின் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆவதில் இருந்தும் தப்பினார்.
இறுதியில், அவரே வெற்றி ரன்னை அடித்து, 40 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 59 ரன்கள் குவித்து, 17 மாதங்களுக்குப் பிறகு தனது முதல் டி20 அரைசதத்தைப் பதிவு செய்தார்.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி, நியூசிலாந்தின் கட்டுக்கோப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்கள் மட்டுமே எடுத்தது.
ஜிம்பாப்வே தரப்பில் அதிகபட்சமாக வெஸ்லி மாதேவெரே 32 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் மாட் ஹென்றி சிறப்பாக பந்துவீசி 26 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மிட்செல் சான்ட்னர் மற்றும் ரச்சின் ரவீந்திரா தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
121 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு ஆரம்பத்தில் அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர் டிம் செய்ஃபர்ட் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு கான்வேயுடன் இணைந்த ரச்சின் ரவீந்திரா அதிரடியாக விளையாடி 19 பந்துகளில் 30 ரன்கள் குவித்தார். இதில் டிரெவர் குவாண்டு வீசிய ஒரே ஓவரில் மூன்று பவுண்டரிகள் அடங்கும்.
கான்வே ஆரம்பத்தில் தடுமாறினாலும், பின்னர் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்தார். அவருக்கு டேரில் மிட்செல் ஒத்துழைப்பு அளிக்க, நியூசிலாந்து அணி 13.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 122 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மிட்செல் 19 பந்துகளில் 26 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஆட்டநாயகன் விருது வென்ற டெவோன் கான்வே போட்டிக்குப் பிறகு பேசுகையில், "ஆட்டத்தின் ஆரம்பத்தில் எனக்கு அதிர்ஷ்டம் கைகொடுத்தது. அந்தக் கடினமான காலகட்டத்தை நான் தாண்டிவிட்டேன் என்பதில் மகிழ்ச்சி. நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் அணிக்குத் திரும்பி, அணியின் வெற்றிக்கு பங்களித்தது மகிழ்ச்சி அளிக்கிறது." என்று கூறினார்.
ஃபின் ஆலனுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக நீண்ட இடைவெளிக்குப் பிறகு டி20 அணிக்கு திரும்பிய கான்வே, இந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியின் மூலம், நியூசிலாந்து அணி இந்த முத்தரப்பு தொடரில் தனது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.