What man.. வாட்மோரையே வேலையை விட்டு தூக்கிருச்சே இந்த ஜிம்பாப்வே!!
ஹராரே: ஒரு காலத்தில் கிரிக்கெட் ஆடும் நாடுகளின் கனவு நாயகனாக திகழ்ந்தவர் வாட்மோர். அவரைப் பார்த்து மிரண்ட நாடுகள் அதிகம். காரணம், ஒன்றுமே இல்லாத சுண்டைக்காய் நாடாக திகழ்ந்து வந்த இலங்கை, உலகக் கோப்பையை முதல் முறையாக வெல்ல முக்கியக் காரணமாக அமைந்தவர் இந்த வாட்மோர். இன்று அவரை வேலையை விட்டு தூக்கி ஷாக் கொடுத்துள்ளது இன்னும் சுண்டைக்காய் நாடாகவே இருக்கும் ஜிம்பாப்வே.
ஜிம்பாப்வே அணியின் பயிற்சியாளராக இருந்து வந்தார் டேவிட் வாட்மோர். அதேபோல கேப்டனாக இருந்தவர் ஹாமில்டன் மசகட்ஸா. இவரையும் சேர்த்தே டிஸ்மிஸ் செய்துள்ளது ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம்.
இடைக்காலப் பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்கா முன்னாள் வேகப் பந்து வீச்சாளர் மக்காயா டினி நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல துணை கேப்டன் கிரீம் கிரீ்மரை கேப்டனாக்கியுள்ளனர். ஜூன் 11ம் தேதி இந்தியாவுடனான கிரிக்கெட் தொடர் ஆரம்பிக்கும் நிலையில் இந்த மாற்றங்களைச் செய்துள்ளது ஜிம்பாப்வே.

மோசமான ஆட்டத்தால்
ஐசிசி உலகக் கோப்பை டி20 தொடரில் ஜிம்பாப்வே மோசமாக ஆடியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாம். தொடக்கச் சுற்றோடு இந்தத் தொடரில் ஜிம்பாப்வே அணி நடையைக் கட்டியது நினைவிருக்கலாம். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம்தான் வாட்மோர், நான்கு ஆண்டு கால ஒப்பந்தத்தின் கீழ் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். ஆனால் அதிரடியாக தற்போது அவரை நீக்கியுள்ளனர்.

க்ளூஸ்னர்
இதற்கிடையே ஜிம்பாப்வே அணியின் பேட்டிங் பயிற்சியாளராக முன்னாள் தென் ஆப்பிரிக்க ஆல் ரவுண்டர் லான்ஸ் க்ளூஸ்னர் 2 ஆண்டு ஒப்பந்தத்தின் கீழ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணி ஜிம்பாப்வேயில் 3 ஒரு நாள் போட்டிகளிலும், 3 டி20 போட்டிகளிலும் ஆடவுள்ளது. ஜூன் 11ம் தேதி முதல் போட்டி தொடங்கவுள்ளது. இந்த நிலையில் ஜிம்பாப்வே அணியில் களையெடுப்புகள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

யார் இந்த வாட்மோர்
62 வயதாகும் வாட்மோர், இலங்கையில் பிறந்த ஆஸ்திரேலியர் ஆவார். ஆஸ்திரேலியாவுக்காக 7 டெஸ்ட் போட்டிகளிலும், ஒரு ஒரு நாள் போட்டியிலும் ஆடியுள்ளார். இவர் ஒரு பேட்ஸ்மேன். ஆஸ்திரேலியாவின் விக்டோரியா அணிக்காக முதல் தரப் போட்டிகளில் ஆடி 6000 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார்.

இலங்கைக்கு முதல் கோப்பை
1990ல் பயிற்சியாளராக மாறினார். முதலில் இலங்கை அணியின் பயிற்சியாளராக இருந்தார். இவரது காலத்தில்தான் 1996ம் ஆண்டு இலங்கை அணி தனது முதல் உலகக் கோப்பையை வென்றது. வாட்மோர் பயிற்சியின் கீழ்தான் இலங்கை அணி சர்வதேச அளவில் சவாலான ஒரு அணியாக மாறியது குறிப்பிடத்தக்கது.

வங்கதேசம் - பாகிஸ்தான்
இதைத் தொடர்ந்து வங்கதேசம், பாகிஸ்தான் அணிகளுக்கும் பயிற்சி அளித்துள்ளார் வாட்மோர். கடந்த ஆண்டு ஜிம்பாப்வே அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

கொல்கத்தா அணியின் பயிற்சியாளர்
இந்தியாவுக்கும், வாட்மோருக்கும் கூட சிறிது தொடர்புண்டு. இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு முன்பு இவர் பரிசீலிக்கப்பட்டார். ஆனால் பேச்சு சரிப்பட்டு வரவில்லை என்பதால் இவர் கைவிடப்பட்டார். அதேசமயம், 2009 முதல் 2012 வரை ஐபிஎல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளராக இருந்தார் வாட்மோர். 2012ல் அவர் தனது பதவியிலிருந்து விலகினார்.
வாட்மோர் பயிற்சியாளராக பணியாற்றிய காலத்தில் எந்த அணியும் பாதியில் அவரை பாதியிலேயே நீக்கியதில்லை. ஆனால் இப்போதுதான் அவரை ஜிம்பாப்வே பாதியிலேயே டிஸ்மிஸ் செய்து ஷாக் கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications