டி20 கிரிக்கெட்டில் 344 ரன்கள் குவித்து ஜிம்பாப்வே உலக சாதனை.. 27 சிக்சர்கள்! 33 பந்தில் ராசா சதம்
நயிரோபி : கம்பியா என்ற ஆப்பிரிக்க நாட்டுக்கு எதிரான சர்வதேச டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி ஒரே இன்னிங்ஸில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 344 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்திருக்கிறது. இதன் மூலம் சர்வதேச t20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரே இன்னிங்ஸில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.
2026 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை போட்டிக்கான தகுதி சுற்று போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் குரூப் பி பிரிவில் உள்ள ஜிம்பாப்வே அணி ஆப்பிரிக்காவின் சிறிய நாடுகளில் ஒன்றான கம்பியா என்ற அணியுடன் பல பரிட்சை நடத்தியது.

Nairobi யிவ் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி கேப்டன் சிக்கந்தர் ராசா முதலில் பேட்டிங் செய்தார். ஊர் பெயர் தெரியாத அணி கிடைத்தவுடன் அவர்களுடைய பந்துவீச்சை மைதானத்தில் நான்கு பக்கமும் சுக்குநூறாக ஜிம்பாப்வே வீரர்கள் உடைத்தனர். வடிவேலு எப்படி தாம் ஒரு ரவுடி என காட்டிக்கொள்ள ஒரு முதியவரிடம் சென்று தன் பலத்தை காட்டி புகைப்படம் எடுத்துக் கொள்வாரோ அதேபோல் ஜிம்பாபே அணி தாங்களும் ஒரு பெரிய ரவுடி தான் என்பதை ஒரு கத்துக்குட்டி அணிக்கு எதிராக காட்டியிருக்கிறார்கள்.
தொடக்க வீரராக களம் இறங்கிய பிரைன் பென்னெட் 26 பந்துகளில் 55 ரன்களும், மருமணி என்ற வீரர் 19 பந்துகளில் 62 ரன்களும் குவித்தனர் இதனை எடுத்து கேப்டன் சிக்கந்தர் ராசா EA sports கிரிக்கெட் 2007 கம்ப்யூட்டர் வீடியோ கேம் போல் பேட்டிங் ஆடினார். 15 சிக்ஸர், 7 பவுண்டரி என 43 பந்துகளில் அவர் 133 ரன்கள் குவித்தார். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 309 என்று அளவில் இருந்தது. சிக்கந்தர் ராசா 33 பந்துகளில் சதம் அடித்தார்.
இது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அடிக்கப்பட்ட 2வது அதிவேக சதம் என்ற பெயரை பெற்றார்.இறுதியில் கிளைவ் 17 பந்துகளில் 53 ரன்கள் எடுக்க ஜிம்பாப்வே அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 344 ரன்கள் குவித்தது. இதன் மூலம் சர்வதேச t20 கிரிக்கெட்டில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் என்ற சாதனையை ஜிம்பாப்வே படைத்தது.
இதற்கு முன்பு நேபால் அணி மங்கோலியாவுக்கு எதிராக கடந்த 2023 ஆம் ஆண்டு மூன்று விக்கெட்டுகளை இழந்து 314 ரன்கள் குவித்தது.சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அடிக்கப்பட்ட அதிக ஸ்கோர் ஆக இருந்தது. தற்போது அதனை ஜிம்பாப்வே முறியடித்து இருக்கிறது. அது மட்டும் அல்லாமல் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்ஸில் 27 சிக்ஸர்கள் விளாசி ஜிம்பாவே அணி புதிய சாதனை படைத்திருக்கிறது.இதனையடுத்து 345 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கம்பியா அணி 54 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் ஜிம்பாப்வே அணி 290 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


Click it and Unblock the Notifications