ஹராரே: 2வது டி20 கிரிக்கெட் போட்டியில், இந்தியாவுக்கு அதிர்ச்சி தோல்வியை பரிசாக கொடுத்தது ஜிம்பாப்வே அணி.
ஜிம்பாப்வேயில் சுற்றுப் பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் ஆடிய ரஹானே தலைமையிலான இந்திய அணி, அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றி அசத்தியது.
இதையடுத்து 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் இவ்விரு அணிகளும் பலப் பரிட்சை நடத்தின. முதல் டி20 போட்டியில், இந்தியா வென்ற நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி ஹராரே நகரில் நேற்று நடந்தது.

டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஜிம்பாப்வே அணியி்ல் அதிகபட்சமாக சிபாபா 67 ரன்களை குவித்தார். மசாகட்சா (19), வில்லியம்ஸ் (17) ரன்களும் எடுத்தனர். 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 145 ரன்களை எடுத்தது ஜிம்பாப்வே.
இந்திய அணி தரப்பில் புவனேஷ் குமார், எம்.எம். ஷர்மா தலா 2 விக்கெட்டுகளையும், சந்தீப் ஷர்மா, ஸ்டூவர்ட் பின்னி, அக்ஷர் படேல் ஆகியோர் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
146 ரன்களை இலக்காக கொண்டு ஆட வந்தது இந்தியா. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரஹானே மற்றும் விஜய் களமிறங்கினர். வழக்கம்போல சொதப்பிய ரஹானே 4 ரன்களில் ஆட்டமிழந்தார். பிற பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்களில் வெளியேறிய நிலையில் நம்பிக்கையளித்த உத்தப்பா 42 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
ஜிம்பாப்வேயின் பந்து வீச்சில் ரன் சேர்க்க முடியாமல் திணறிய இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 135 ரன்கள் மட்டுமே எடுத்தது. எனவே ஜிம்பாப்வே அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதனால் 2 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. டி20 தொடரையும் ஒயிட்வாஷ் செய்யலாம் என்ற இந்திய அணியின் முயற்சி பலிக்கவில்லை.