உலகக் கோப்பையில் மிகப் பெரிய அனுபவம் கொண்ட உருகுவேயும், இப்போதுதான் தட்டித் தவழ்ந்து எழுந்து வரும் கானாவும் இன்று நடைபெறும் 2வது காலிறுதி ஆட்டத்தில் மோதுகின்றன.
இப்போதுதான் பிரேசிலும், அர்ஜென்டினாவும். ஆனால் ஒரு காலத்தில் உருகுவேதான் உலகின் முன்னணி கால்பந்து அணி. தென் அமெரிக்க கால்பந்து என்றாலே முதலில் நினைவுக்கு வருவது உருகுவேதான். ஆனால் பிரேசில், அர்ஜென்டினாவின் வரவுக்குப் பின்னர் இது பழங்கதையாகி விட்டது.
பெருமையை இழந்தாலும் வலிமையை இழக்கவில்லை என்கிறது உருகுவே அணி. இந்தத் தொடரில் இறுதிப் போட்டி வரை முன்னேறுவதை லட்சியமாக கொண்டுள்ளது. அடுத்து கோப்பையை மட்டும் வென்றால் போதும் என்கிறார் உருகுவே பயிற்சியாளர் தபரேஸ்.
இன்று நடைபெறும் 2வது காலிறுதிப் போட்டியில், உருகுவே அணி, குட்டி அணியான கானாவை சந்திக்கிறது. கிட்டத்தட்ட கோடீஸ்வரனும், பிச்சாதிபதியும் மோதுவது போல இது.
கானா கடந்த உலகக் கோப்பைப் போட்டித் தொடரில்தான் முதன் முதலாக விளையாட வந்தது. அதில் 2வது சுற்றோடு வெளியேறி விட்டது. ஆனால் இந்த முறை காலிறுதிக்குள் வந்து விட்டது. இதனால் படு தெம்புடன் உள்ளது கானா.
மறுபக்கம் 1930, 1950 ஆகிய ஆண்டுகளில் இருமுறை கோப்பையை வென்ற அணி உருகுவே. இருப்பினும் 1970ம் ஆண்டுக்குப் பிறகு காலிறுதிக்கு மேல் அது முன்னேறியதில்லை. இதைத்தான் இழந்த பெருமை என்பது. இதைப் பிடிக்கத்தான் இப்போது வேகமாக உள்ளது உருகுவே.
அதேசமயம், கானா இன்றைய போட்டியில் வென்றால் அரை இறுதிக்கு முன்னேறிய முதல் ஆப்பிரிக்க அணி என்ற வரலாற்றைப் படைக்கும். இதனால் ஒட்டுமொத்த ஆப்பிரிக்கர்களும் கானாவின் கானம் பாடி வருகின்றனர்.
கானா அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலிக்கிறார் அசமாவோ கியான். அவரது ஒன்மேன் ஷோவால் கானா கலக்கிக் கொண்டிருக்கிறது. இது உருகுவேயை உருக்கி விடும் எனவும் கானா அணி நம்பிக்கையுடன் உள்ளது. கானா அடித்துள்ள 4 கோல்களில் 3 கோல்களை கியான் மட்டுமே போட்டுள்ளார். அதேபோல ஜான் மென்சாவும், பெரிய 'மெனஸாக' இருப்பார் உருகுவேக்கு.
உருகுவேயும் இளைத்ததில்லை. கட்த காலிறுதிக்கு முந்தைய போட்டியில் லூயிஸ் சுவாரஸ் போட்ட கோல் மறக்க முடியாதது. அதேபோல டியகோ போர்லானும் மிரட்டலாக ஆடி வருகிறார்.
கானா குறித்து போர்லான் கூறுகையில், அவர்கள் நல்ல வேகமான வீரர்களாக உள்ளனர். உறுதியாக உள்ளனர். ஜெர்மனிக்கே மிரட்டலைக் கொடுத்தவர்கள். எனவே கவனமுடனேயே விளையாடுவோம் என்கிறார்.
கியான் கூறுகையில், உருகுவே பெரிய அணி. தாக்குதலில் கில்லிகள். இதைத்தான் நாங்கள் சமாளிக்க வேண்டும். போர்லான், சுவாரஸ் போன்றவர்களைக் கொண்ட அணியை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்கிறார்.
இன்று ஆனந்த ராகம் பாடப் போவது கானாவா அல்லது உருகுவேயா? பொறுத்திருந்து பார்ப்போம்.
myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.
Allow Notifications
You have already subscribed
Story first published: Wednesday, December 7, 2011, 18:39 [IST]