உலகம் முழுவதும் உள்ள பிரேசில் ரசிகர்கள் நொறுங்கிப் போய் விட்டனர்- தங்களது அபிமான அணி இப்படி பரிதாபமாக வெளியேறியதை நினைத்து.
யாரும் எதிர்பார்க்கவில்லை பிரேசில் இப்படித் தோல்வியுறும் என்று. நெதர்லாந்து வீரர்கள் சிறப்பாக, போராட்ட குணத்துடன் ஆடியது ஒருபக்கம் என்றால் சேம் சைடு கோல் போட்டு பெரும் அவமானத்தை சந்தித்துள்ளது பிரேசில்.
ஐந்து முறை சாம்பியனான ஒரு அணி ஆடிய ஆட்டமாகவே நேற்றைய ஆட்டம் இல்லை. பிரேசிலுக்கு இது மறக்க முடியாத அவமானம்.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்தப் போட்டியில் பிரேசில் வெல்ல முடியும் என்ற பொதுவான நம்பிக்கை இருந்தது. அதற்கேற்ப ஆட்டத்தின் தொடக்கமும் இருந்தது. ஆட்டம் தொடங்கிய 10வது நிமிடத்திலேயே ராபின்ஹோ அபாரமான ஒரு கோலடித்து அணிக்கு முன்னிலை ஏற்படுத்தினார். இதனால் இன்று பிரேசில் கோல் ம்ழை பொழியப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
ஆனால் டக்கென சுதாரித்த நெதர்லாந்து பிரேசிலை முடக்கிப் போட்டு விட்டது. நெதர்லாந்தின் போராட்ட ஆட்டத்தால் பிரேசில் தடுமாறியது. இதனால் தொடர்ந்து அந்த அணியால்கோல் போட முடியவில்லை. அதேசமயம், நெதர்லாந்தும் கோல் போட முடியாமல் திணறியது.
இப்படியாக முதல் பாதி ஆட்டம் 1-0 என்ற கணக்கில் பிரேசிலுக்கு சாதகமாக முடிந்தது. இரண்டாவது பாதி ஆட்டத்தில் நெதர்லாந்தின் துடிப்பான ஆட்டம் பிரமாதமாக இருந்தது. இந்த சமயத்தில் பிரேசிலுக்கு பேரதிர்ச்சி தந்தார் பெலிப்பி மெலோ. 58வது நிமிடத்தில் சேம் சைடு கோல் போட்டு விட்டார் மெலோ. இதனால் ஆட்டம் சம நிலையை எட்டியது.
இந்த கோலால் உற்சாகமடைந்த நெதர்லாந்து வீரர்கள் எப்படியாவது ஒரு கோலடித்து விட வேண்டும் என தீவிரமாக ஆடினர். இதற்கு 68வது நிமிடத்தில் பலன் கிடைத்தது. ஸ்னீடர் தன்னை நோக்கி வந்த பந்தை அழகாக முட்டி கோலாக்கி நெதர்லாந்து ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடித்தார்.
அதன் பின்னர் கோல் ஏதும் விழவில்லை. இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து அபார வெற்றியைப் பெற்றது. இதன் மூலம் அரை இறுதிக்குள் நுழைந்து புதிய சாதனை படைத்துள்ளது.
இந்தத் தொடரில் நெதர்லாந்து தொடர்ச்சியாக பெறும் 5வது வெற்றி இது. கடந்த 70களில் இரண்டு முறை ரன்னர் அப் ஆன அணி நெதர்லாந்து. இந்த முறையும் இறுதிப் போட்டிக்கு வந்து விட முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளது நெதர்லாந்து. அதற்கு இன்னும் ஒரு வெற்றி மட்டுமே பாக்கி.
நேற்றைய போட்டி பிரேசிலுக்கு மறக்க முடியாத சோகத்தைக் கொடுத்து விட்டது. சேம் சைடு கோல் போட்ட மெலோ சிறிது நேரத்தில் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார்.
மெலோவின் சேம் சைடு கோல், நெதர்லாந்தின் திடீர் எழுச்சி உள்ளிட்ட காரணத்தால் பிரேசில் வீழ்ந்து விட்டது.
இதன் மூலம் அந்த அணியின் 6வது பட்ட வேட்டை முடிவுக்கு வந்துள்ளது. இனி 2014ல் பிரேசிலில் நடைபெறவுள்ள உலகக் கோப்பைப் போட்டியின்போதுதான் தனது 6வது பட்ட வாய்ப்பை தொடர வேண்டிய நிலைக்கு பிரேசில் தள்ளப்பட்டுள்ளது.
கடந்த உலகக் கோப்பைப் போட்டித்தொடரிலும் பிரேசில் காலிறுதியோடு வெளியேறியது. அப்போட்டியில் பிரான்சிஸிடம் 0-1 என்ற கணக்கில் தோல்வியுற்றது பிரேசில். கடந்த உலகக்கோப்பைப் போட்டித் தொடரில் 5வது இடத்தைப் பிடித்த பிரேசிலுக்கு இந்த முறை 6வது இடமே கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.
Allow Notifications
You have already subscribed
Story first published: Wednesday, December 7, 2011, 18:39 [IST]