10 பிளாப், 7 டாப்!

இந்த எண் பொதுவாக யாருக்கும் எளிதாக கிடைத்து விடாது. மிகச் சிறந்த ஸ்டிரைக்கர்களுக்குத்தான் இந்த எண் கிடைக்கும். சரி 10ம் எண்ணுக்கு மட்டும் ஏன் இந்த விசேஷம்.
1928ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், லண்டன் நகரில் நடந்த செல்சியா,ஆர்சனல் இடையிலான கால்பந்துப் போட்டியில், முதல்முறையாக வீரர்கள் எண்ணுடன் கூடிய ஜெர்சியை அணிந்து ஆட ஆரம்பித்தனர். கால்பந்துப் போட்டியில் எண்ணுடன் கூடிய ஜெர்சி அணிந்து வீரர்கள் ஆடியது அதுவே முதல் முறையாகும்.
அந்தப் போட்டியில் 10ம் எண்ணுடன் கூடிய ஜெர்சி அணிந்த வீரர் சிறப்பாக ஆடியதால் அந்த எண் பிரபலமானது. பின்னாளில் உலகப் புகழ் பெற்ற வீரர்களுக்கு 10ம் எண்ணைத் தருவது பிரபலமானது.
பீலே, மைக்கேல் பிளாட்டினி, மாரடோனா, ரொனால்டின்ஹோ, ஜினெடின் ஜிடேன் என பிரபல வீரர்கள் 10ம் எண் ஜெர்சி அணிந்து ஆடிய பிரபலங்கள்.
ஆனால் நடப்பு உலகக் கோப்பைப் போட்டித் தொடரில் பத்தாம் எண் ஜெர்சி அணிந்த வீரர்கள் பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளனர். மாறாக 7ம் எண் ஜெர்சி அணிந்த வீரர்கள்தான் கலக்கி வருகின்றனர்.
10ம் எண் வீரர்களான பிரேசிலின் காகா, அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி, இங்கிலாந்தின் வேயன் ரூனி ஆகியோர் இந்த முறை பெரும் ஏமாற்றத்தையே கொடுத்துள்ளனர்.
மாறாக 7ம் எண் ஜெர்சி அணிந்த நெதர்லாந்தின் கியூட், ஸ்பெயினின் டேவிட் வில்லா, ஜெர்மனியின் பாஸ்டியன் ஸ்வெயின்ஸ்டீகர் ஆகியோர் கலக்கிக் கொண்டிருக்கின்றனர்.
ஜெர்மனியின் பாஸ்டியன் அர்ஜென்டினாவுக்கு எதிரான போட்டியில் அபாரமாக செயல்பட்டார். மெஸ்ஸி அன் கோவின் தடுப்புகளை முறியடித்து ஜெர்மனிக்காக 2 கோல்கள் கிடைக்க காரணமாக இருந்தார். முதல் கோலை அடித்த தாமஸ் முல்லருக்கும், பாஸ்டியன்தான் பந்தை பாஸ் செய்து அபாராமான கோலைப் போட வழி வகுத்தார். 3வது கோலைப் போட்ட பிரட்ரிச்சிக்கும் பாஸ்டியன்தான் பந்தை அழகாக எடுத்துக் கொடுத்தார்.
டேவிட் வில்லாவைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. ஸ்பெயின் இதுவரை போட்டுள்ள 6 கோல்களில் 5 கோல்களை வில்லாவே போட்டுள்ளார். 6வது கோல் போடவும் இவரே உதவினார். மொத்தத்தில் ஸ்பெயின் அரை இறுதி வரை வந்ததற்கு வில்லாவின் விஸ்வரூபம்தான் காரணம்.
இப்படி 10ம் எண் ஜெர்சிக்காரர்கள் எல்லாம் புறமுதுகிட்டு ஓட, 7ம் எண் வீரர்கள் கலக்கிக் கொண்டிருப்பது விசித்திரமான ஒரு உண்மை.
Story first published: Wednesday, December 7, 2011, 18:39 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications