இன்று முதல் உலகக் கோப்பை கால்பந்து: தெ. ஆப்பிரிக்கா, மெக்சிகோ மோதல்

ஆப்பிரிக்கக் கண்டத்தின் முதல் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி என்ற பெருமையைப் பெற்றுள்ள 19வது உலகக் கோப்பைப் போட்டித் தொடர் இன்று தொடங்குகிறது.
முதல் போட்டியில் மெக்சிகோவும், தென் ஆப்பிரிக்காவும் மோதுகின்றன. இந்தப் போட்டிக்கான அணியை தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் கார்லோஸ் அல்பர்டோ பெரைரா அறிவித்துள்ளார்.
கெளதமாலா மற்றும் டென்மார்க் அணிகளுடன் நடந்த வார்ம் அப் போட்டிகளில் பங்கேற்ற அணியே மெக்சிகோவுடன் ஆடும் என அறிவித்துள்ளார் பெரைரா. கெளதமாலாவை 5-0 என்ற கோல் கணக்கிலும், டென்மார்க்கை 1-0 என்ற கணக்கிலும் தென் ஆப்பிரிக்கா வென்றிருந்தது.
தென் ஆப்பிரிக்க அணி விவரம் - இதுமெலிங் குனே, சிபோனிசோ காக்ஸா, லூகாஸ் துவாலா, பொங்கானி குமாலோ, ஆரோன் மோகினா, ரனில்வே ரெட்சோலயானி, காகிஷோ டிகாகோய், ஸ்டீவன் பியனார், டெகோ மோடிசே, சிபிவே ஷாபாலாலா, காட்லேகோ பேலா.
உலக அளவில் 83வது தர வரிசையில் உள்ளது தென் ஆப்பிரிக்கா. இருப்பினும் கடந்த 12 கால்பந்துப் போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று தென் ஆப்பிரிக்க ரசிகர்களைக் கவர்ந்து வைத்துள்ளது.
முதல் முறையாக தற்போது உலகக் கோப்பைப் போட்டியை நடத்துவதால் அணி மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு பலமாகவே உள்ளது.
அதேசமயம், மெக்சிகோவின் மேலாளர் ஜேவியர் அகுரே தென் ஆப்பிரிக்காவை வெற்றி கொள்ளும் திறமை தனது வீரர்களிடம் உள்ளதாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் நாங்கள் இங்கு கால்பந்து விளையாட வந்துள்ளோம். யாரையும் நண்பர்களாக்குவதற்கோ, வேடிக்கை பார்க்கவோ வரவில்லை. வெற்றி மட்டுமே எங்களது கண்களில் தெரிகிறது என்றார்.
அகுரே இப்படிக் கூறினாலும் உலகக் கோப்பை வரலாற்றில் மெக்சிகோ தனது முதல் போட்டிகளில் வென்றதை விட தோற்றதே அதிகம். மேலும் கடந்த 1990, 2002 போட்டிகளில் தொடக்க ஆட்டங்களில் ஆப்பிரிக்க அணிகளே வென்றுள்ளன. 90ல் அர்ஜென்டினாவை காமரூன் வீழ்த்தியிருந்தது. 2002ல் பிரான்ஸை செனகல் தோற்கடித்திருந்தது.
இந்த ராசி இன்றைய தொடக்கப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு சாதகமாக இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:38 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications