உலகக் கோப்பைக் கால்பந்துக் கனவு வேட்டையிலிருந்து அர்ஜென்டினா விலக்கப்பட்டு விட்டாலும் கூட அந்த நாட்டில் அணியின் மீதான அபிமானம் சற்றும் குறையவில்லை. இன்னும் பாசக்கார பயபுள்ளைகளாகத்தான் இருக்கிறார்கள். குறிப்பாக மாரடோனா மீது அன்பு சற்றும் குறையவில்லை.
இந்த உலகக் கோப்பைத் தொடருக்கு வருவதற்கு முன்பு அர்ஜென்டினா சற்று சிக்கலான நிலையில்தான் இருந்தது. மாரடோனாவின் பயிற்சி முறைக்கு சற்று அதிருப்தி காணப்பட்டது. லியோனல் மெஸ்ஸியை மட்டுமே அவர் முன்னிலைப்படுத்துவதாக குமுறல் இருந்தது.
இருந்தாலும் மெஸ்ஸியின் மேஜிக்கை மட்டுமே மாரடோனா பெரிதாக நம்பியிருந்தார். அது உண்மைதான் என்று கூறும் அளவுக்கு லீக் போட்டிகளில் மெஸ்ஸியின் உதவி அர்ஜென்டினா அணிக்கு பேருதவியாகவே இருந்தது.
இதனால் மாரடோனாவுக்கு புகழ் கூடியது. அவரது பயிற்சி விதம், வீரர்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து ஊக்குவிப்பது, அவர் அணிந்த கோட், காது கடுக்கன் என மாரடோனாவுக்கு ரசிகர் பட்டாளம் ஏகமாகவே இருந்தது.
இந்த அபிமானம் இப்போதும் குறையவில்லையாம். அதிலும் அந்த நாட்டு எம்.பி. ஒருவர் மேலும் ஒரு படி போய் மாரடோனாவுக்கு சிலை வைக்கப் போகிறாராம்.
இதுகுறித்து அர்ஜென்டினா நாடாளுமன்றத்தில் ஒரு தனி நபர்தீர்மானம் கொண்டு வந்தார். அர்ஜென்டினாவின் மாபெரும் கால்பந்து மனிதர் மாரடோனா. அவருக்கு தலைநகர் பியூனஸ் அயர்ஸில் சிலை வைத்துக் கெளரவப்படுத்த வேண்டியது அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
விரைவில் இதுதொடர்பாக முடிவெடுக்கப்படும் என அர்ஜென்டினா அரசு கூறியுள்ளது.
அப்படி சிலை வைத்தால் கால்பந்தை மாரடோனா உதைப்பது போல இருக்குமா அல்லது கையால் தொடுவது போல இருக்குமா என்று தெரியவில்லை.
myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.
Allow Notifications
You have already subscribed
Story first published: Wednesday, December 7, 2011, 18:39 [IST]