உலகக் கோப்பை இறுதிப் போட்டியை உலகம் முழுவதும் 70 கோடி பேர் பார்த்தனர்

கிட்டத்தட்ட 215 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உலகக்கோப்பை இறுதிப் போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
நேற்று நடந்தஇறுதிப் போட்டியைக் காண தென் ஆப்பிரிக்காவின் தந்தையான நெல்சன் மண்டேலா நேரில் வந்திருந்தார். 91 வயதாகும் மண்டேலா, மிகுந்த உற்சாகத்துடன் அரங்கில் அமர்ந்து போட்டியை கண்டு ரசித்தார்.
சில நிமிடங்கள் மட்டுமே மண்டேலா போட்டியை ரசித்துப் பார்த்தார். அவருடன் அவரது மனைவி கிரேக்கா மேச்சலும் வந்திருந்தார். இருவரும் மைதானத்தை ஒருமுறை சுற்றி வந்து ரசிகர்களையும் உற்சாகப்படுத்தினர்.
இறுதிப் போட்டியைக் காண சாக்கர் சிட்டி ஸ்டேடியத்தில் 84,490 ரசிகர்கள் குவிந்திருந்தனர். மைதானம் உள்ள பகுதி முழுவதும் மக்கள் வெள்ளமாக இருந்தது.
20 ஆண்டுகளுக்கு முன்பு தென் ஆப்பிரிக்காவில் இப்படி ஒரு பிரமாண்டத்தை கனவு கூட காண முடியாத நிலை இருந்தது என்பதால் நேற்றைய இறுதிப் போட்டியும் கடந்த ஒரு மாதமாக நடந்து வந்த கால்பந்துத் திருவிழாவும் கருப்பர் இன மக்களின் கண்களில் ஆனந்தம் மற்றும் சாதனைக் கண்ணீரை வரவழைத்தது.
இதுகுறித்து தென் ஆப்பிரிக்க அதிபர் ஜூமா கூறுகையில், இந்த உலகக் கோப்பைப் போட்டி தென் ஆப்பிரிக்காவுக்கு விலை மதிக்க முடியாத பல பலன்களைக் கொடுத்துள்ளது. அத்தனை இனத்தவரும் ஓரணியில் திரண்டு வந்து, அருகருகே அமர்ந்தும், ஆர்ப்பரித்தும் போட்டிகளை ரசிப்பதைப் பார்க்கும்போது நெகிழ்ச்சி அடைகிறோம். இதற்காகத்தான் நாங்கள் அன்று போராடினோம். இன்று உலக அரங்கில் தென் ஆப்பிரிக்கா தலைநிமிர்ந்து பெருமையுடன் நிற்கிறது என்றார் பூரிப்புடன்.
நிறைவு விழா
முன்னதாக நடந்த நிறைவு விழாவில், கொலம்பியா பாடகி ஷகீரா தனது வாகா வாகா பாடலை பெரும் ஆர்ப்பரிப்புக்கு மத்தியில் பாடினார்.
கிட்டத்தட்ட 700 கலைஞர்கள் இதில் பங்கேற்றனர். ஜாஸ் முதல் ஹிப் ஹாப் வரை அனைத்து விதமான இசை நிகழ்ச்சிகளும் களை கட்டியிருந்தன. பெரிய பெரிய யானை பொம்மைகள் ஸ்டேடியத்தில் வலம் வந்து அனைவரையும் கவர்ந்தன.
ராட்சத ஸ்கிரீன்கள்
போட்டிகளை மைதானத்திற்கு வெளியே ரசிகர்கள் கண்டு களிப்பதற்காக பல இடங்களில் ராட்சத ஸ்கிரீன்கள் வைக்கப்பட்டிருந்தன. அதில் ஒன்று கிட்டத்தட்ட 650 சதுர அடியாகும்.
ஸ்பெயினில் உற்சாகம்
ஸ்பெயின் அணி கோப்பையை வென்றதும் ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் உற்சாக வெள்ளம் கரை புரண்டோடியது. ஆயிரக்கணக்கானோர் தெருக்களில் ஆடிப் பாடி மகிழ்ச்சி தெரிவித்தனர். விவா எஸ்பானா என்று கோஷமிட்டு ஆடிப் பாடினர்.
மாட்ரிடின் மையப் பகுதி மக்கள் வெள்ளத்தால் கடல் போல காணப்பட்டது. கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் பேர் ராட்சத டிவி திரையில் இந்த போட்டியைக் கண்டு ரசித்தனர்.
நெதர்லாந்தில் சோகம்
அதேபோல நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரிலும் மக்கள் வெள்ளம் குவிந்திருந்தது. ஆனால் நெதர்லாந்து போட்டியில் தோல்வியைத் தழுவியதால் கூடியிருந்த 1 லட்சத்து 80 ஆயிரம் பேரும் மயான அமைதியில் மூழ்கினர். பலர் கண்ணீர் விட்டு அழுததைக் காண முடிந்தது. உற்சாகத்துடன் கூடியிருந்த அவர்கள் சோகத்துடன் திரும்பிச் சென்றனர்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:39 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications