உலகக் கோப்பைக் கால்பந்து-உணர்ச்சிகரமான பிரியாவிடை!

இது ஒரு விளையாட்டுப் போட்டியாக மட்டுமல்லாமல் ஆப்பிரிக்கக் கண்டத்தின் உணர்வுகளை, மதிப்பை, கெளரவத்தை வெளிப்படுத்த அமைந்த நல்ல வாய்ப்பு என்பதே ஒவ்வொரு ஆப்பிரிக்கரின் உணர்வாக அமைந்தது.
கோலாகலமாக நடந்த தொடக்க விழாவைப் போலவே மிகுந்த நெகிழ்ச்சியுடன் கூடிய நிறைவுவிழாவை தென் அமெரிக்கா நடத்திக் காட்டியது. மிகுந்த உணர்ச்சிப் பெருக்குடன் உலகக் கோப்பைக் கால்பந்துக்கு நேற்று இரவு நடந்த நிகழ்ச்சியில் பிரியாவிடை கொடுத்தனர் தென் ஆப்பிரிக்க மக்கள்.
நெல்சன் மண்டலே தனது மனைவி கிரேக்கா சகிதம் அரங்குக்குள் நுழைந்தது முதல் இறுதி நிமிடம்வரை ஆர்ப்பரிப்புடன் கூடியதாக நிறைவு விழா அமைந்தது.
கிட்டத்தட்ட அனைத்து நாடுகளையும் சேர்ந்த, பல தரப்பைச் சேர்ந்த ரசிகர்கள் உற்சாகக் குரல் எழுப்பியபடி நிறைவு விழாவைக் கண்டுகளித்தனர். பலரின் கண்களிலிருந்து மகிழ்ச்சியில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தோடியது.
மடிபா என்று செல்லமாக ஆப்பிரிக்க மக்களால் அழைக்கப்படும் நெல்சன் மண்டேலாவின் வருகையைப் பார்த்ததும் பல தென் ஆப்பிரிக்க ரசிகர்கள் ஆனந்தத்துடன் கண்ணீர் வடித்தனர். ஏதோ ஒரு மூலையில் தூக்கி வீசப்பட்டிருந்த தென் ஆப்பிரிக்கா இன்று உலக அரங்கில் உயரிய நிலையில் அமர இந்த மனிதர்தானே காரணம் என்பது அந்த மக்களின் கண்ணீருக்கான அர்த்தம்.
தென் ஆப்பிரிக்க போர் விமானங்கள் நிகழ்த்திய சாகசக்காட்சிகள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தின. அதேபோல 9 கிரகங்களையும் லேசர் ஒளிகளால் உருவாக்கிக் காட்டியதும் மெய் சிலிர்க்க வைத்தது.
ஷகீராவின் வாகா வாகா பாடலும், நடனமும் அரங்கத்தையே ஆட்டம் போட வைத்தது.
லேடிஸ்மித் பிளாக் மெம்போஸா, ஸ்டோவன், அபிகெயில் குபேகா உள்ளிட்டோரின் பாடல், நடன நிகழ்ச்சிகளும் கண்ணைக் கவர்ந்தன.
தென் ஆப்பிரிக்காவின் பாரம்பரிய இசைக் கருவியான வுவுசேலாவும் கலை நிகழ்ச்சியில் முக்கியப் பங்கு வகித்தது.
தொடக்க நிகழ்ச்சியைப் போலவே இந்த நிறைவு விழாவும் கண்களுக்கு விருந்தாகவும், மனதுக்கு நல்ல சிந்தனையையும் கொடுத்து சிறப்பாக அமைந்தது.
அனைத்து இன மக்களையும் இணைக்கும் ஒரே சக்தி விளையாட்டு என்பதை தென் ஆப்பிரிக்காவில் நடந்த உலகக் கோப்பைக் கால்பந்து போட்டித் தொடர் நிரூபித்துள்ளது என்பதில் சந்தேகம் இல்லை.
Story first published: Wednesday, December 7, 2011, 18:39 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications