நம்ம ஊரு செஸ் மாஸ்கட் "தம்பி" மாதிரி.. ஃபிஃபா உலககோப்பையின் மாஸ்கட் அறிமுகம்.. என்ன பெயர் தெரியுமா
தோஹா : 2022 ஃபிஃபா உலககோப்பை கால்பந்து போட்டி கோலாகலமாக தொடங்கியது. தோஹாவிலிருந்து 40 கி.மீ. அருகே உள்ள அல் பாயத் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியை சுமார் 60 ஆயிரம் ரசிகர்கள் கண்டு களித்தனர்.
இந்த தொடக்க நிகழ்ச்சியில் கத்தார் நாட்டின் கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் வாள் நடனம் உள்ளிட்ட கண்கவர் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனை தொடர்ந்து பிரபல ஹாலிவுட் நடிகர் மார்கன் ஃபிரிமேன், ஃபிஃபா உலககோப்பையை தொகுத்து வழங்கினார்.

மாஸ்கட்
இதில், திடீரென்று வெள்ளை நிறத்தில் வொடோபோன் விளம்பரத்தில் வரும் பொம்மை அரபியர்கள் ஆடை அணிந்து வருவது போல் அந்தரத்தில் தோன்றியது. அப்போது தான், இதற்கு பெயர் லாயிப் என்றும், அது தான் ஃபிஃபா உலக கோப்பையின் மாஸ்கட் என்றும் அறிமுகப்படுத்தப்பட்டது. அட இது வேற ஒன்றும் இல்லங்க, நம்ம ஊர்ல் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்ற போது தம்பி என்று வேட்டி அணிந்து மாஸ்கட் அறிமுகப்படுத்தினார்கள் அல்லவா? அதே மாதிரி தான்.

லாயிப் அர்த்தம்?
சரி லாயிப் என்றால் என்ன அர்த்தம் என்று விசாரித்தோம். அப்போது தான் தெரிந்தது திறமை வாய்ந்த வீரன் என்ற பொருளாம். அதற்கு தான் லாயிப் என்று அந்த பொம்மைக்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்த பொம்மை பார்ப்பதற்கு ஹாலிவுட் படத்தில் வரும் கேஸ்பர் போல் காட்சி அளித்ததது. கால்பந்து கோப்பை என்பதால், பெண்களின் ஸ்பெஷல் நடனம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

நடனம்
ஆனால், ஆடவர்களின் ஸ்பெஷல் நடனம் தான் இடம்பெற்றது. கத்தார் பாலை வன நாடு என்பதால் ஓட்டகங்கள் special appearance கொடுத்தன. நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய மார்கன் ஃபிரிமேன்,கால்பந்து எவ்வாறு உலகத்தை இணைக்கறது என்று பாடம் எடுத்தார். அப்போது கத்தாரை சேர்ந்த மாற்று திறனாளியும், உலககோப்பைக்கான தூதருமான கனிம் அல் முஃப்தா, உலககோப்பை கால்பந்து போட்டியை காண, கத்தார் சார்பாக வரவேற்கிறேன் என்று கூறினார்.

எப்படி இருந்தது விழா?
மேலும் கத்தார் அனைத்து கலாச்சாரத்தையும் மதிக்கிறது. எங்கள் கலாச்சாரத்தையும் உலகிற்கு எடுத்து சொல்ல இது ஒரு நல்ல மேடையாக அமைந்துள்ளது என்று அவர் கூறினார். அனைத்து கலாச்சாரத்தையும் மதிக்கிறேன் என்று சொல்லிவிட்டு, இவ்வளவு தடையை விதிக்கலாமா என்று ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வந்தனர். தொடக்க நிகழ்ச்சியில் பாப் பாடல் எல்லாம் இடம்பெற்றாலும், இது கத்தார், உலகத்திற்கு காட்டும் நிகழ்ச்சி போல் இல்லாமல், கத்தாருக்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சி போல் நடந்து முடிந்தது.


Click it and Unblock the Notifications