'மெர்சி' இல்லாத மெஸ்ஸி-கிடுக்கிப் பிடியில் கிரீஸ்!

முதல் போட்டியில் நைஜீரியாவை வென்று, 2வது போட்டியில் தோற்றுள்ளது கிரீஸ். அதேசமயம், இரு போட்டிகளிலும் வென்று ஏற்கனவே நாக் அவுட் ரவுண்டுக்கு துண்டு போட்டு விட்ட அணி அர்ஜென்டினா.
சரியான பார்மில் இருக்கும் அர்ஜென்டினாவிடம் சிக்கி கிரீஸ் கிரீச்சிடப் போவதைப் பார்க்க அர்ஜென்டினா ரசிகர்கள் படு ஆர்வமாக உள்ளனர்.
இன்றைய போட்டியில் அர்ஜென்டினா வெல்லும் என்பது பொதுவான எதிர்பார்ப்பு. காரணம், அந்த அணிக்கு எந்தவித நெருக்கடியும் இல்லை. அதேசமயம், கிரீஸுக்கு ஏதாவது ஒரு புள்ளி கிடைத்தாக வேண்டும் என்ற நிலை. இன்றைய போட்டியில் வென்றால் அதற்குப் பெரிய நிம்மதியாகும்.
மேலும், நைஜீரியா - தென் கொரியா போட்டி டிரா ஆனால் கிரீஸுக்கு பெரும் நிம்மதியாகி விடும். அதில் ஏதாவது ஒரு அணி வென்றால் கூட, கண்டிப்பாக அர்ஜென்டினாவை வென்றால் மட்டுமே கிரீஸால் அடுத்த சுற்று பற்றி கனவு காண முடியும்.
லியோனல் மெஸ்ஸி இந்தத் தொடர் முழுவதும் சிறப்பாக ஆடி வருகிறார். அணிக்கு கோல்கள் கிடைக்க அவருடைய பணிகள் படு உதவிகரமாக உள்ளன. கிட்டத்தட்ட மாரடோனாவின் ஜெராக்ஸ் போலவே செயல்படுகிறார் மெஸ்ஸி. இதனால் அர்ஜென்டினா அசைக்க முடியாத பலத்துடன் காணப்படுகிறது.
முதல் போட்டியில் சற்று சுமாராக ஆடியிருந்தாலும் கூட 2வது போட்டியில் தென் கொரியாவை 4-1 என்ற கோல் கணக்கில் அபாரமாக வீழ்த்தி தனது பலத்தை நிரூபித்த அணி அர்ஜென்டினா. எனவே இன்றைய போட்டியில் இன்னொரு போர்ச்சுகலாக மாறி கோல் மழை பொழியலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
மெஸ்ஸி தவிர ஹிகுயனும் அபாரமான பார்மில் உள்ளார். அவருக்கும் கிரீஸின் ஜார்ஜியாஸ் சமராஸுக்கும் இடையே இன்று நல்ல மோதல் இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
முதல் இரு போட்டிகளில் ஐந்து கோல்கள் அடித்து அபாரமான பார்மில் இருக்கும் அர்ஜென்டினாவை அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் ஆடுமா கிரீஸ் என்பதை இன்று நள்ளிரவு பார்க்கலாம்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:38 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications