வட கொரியாவை மீது கோல் மழை பொழிந்து சுருட்டி எடுத்து விட்ட போர்ச்சுகல், இன்றைய போட்டியில் ஜாம்பவான் பிரேசிலை சந்திக்கவுள்ளது.
இதே வட கொரியாவிடம் தான் விளையாடியதை விட மகா திறமையுடன் போர்ச்சுகல் ஆடிய விதத்தைப் பார்த்த பிரேசில், போர்ச்சுகல் அணியை கவனமுடன் எதிர்கொள்ள தயாராகி வருகிறது.
இந்த நீதிமன்றம் விசித்திரமான பல வழக்குகளைப் பார்த்துள்ளது என்ற மனோகரா பட வசனம் போல மாறியுள்ளது உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டித் தொடர். யார் சூப்பராக ஆடுவார்கள் என எதிர்பார்த்தோமோ அவர்கள் சொதப்பி வருகின்றனர். யார் சுமாராக ஆடுவார்கள் என எதிர்பார்த்தோமோ அவர்கள் அட்டகாசமாக ஆடுகின்றனர்.
வட கொரிய அணியிடம் பிரேசில் திணறியது அனைவரையும் வியக்க வைத்தது. ரொம்பக் கஷ்டப்பட்டு 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது பிரேசில். ஆனால் அதே வட கொரியாவை புரட்டி எடுத்து 7-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது போர்ச்சுகல். தர வரிசையில் பிரேசில் முதலிடத்தில் உள்ளது. 3வது இடத்தில் உள்ளது போர்ச்சுகல்.
எனவே இன்றைய போட்டி மிகப் பெரிய விருந்தாக ரசிகர்களுக்கு அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.
பிரேசிலை முன்பு அடிமைப்படுத்தி வைத்திருந்த நாடு போர்ச்சுகல். எனவே இந்தப் போட்டி அந்த நாடுகளின் ரசிகர்களைப் பொறுத்தவரை மானப் பிரச்சினையும் கூட.
புள்ளி விவரத் தகவல்களைப் பார்க்கும்போது பிரேசிலன் கையே ஓங்கியிருப்பது தெரியும். இதுவரை போர்ச்சுகலை பிரேசில் 12 முறை வென்றுள்ளது. போர்ச்சுகலின் பங்கு 4. பிரேசில் அணி 36 கோல்களைப் போட்டுள்ளது. போர்ச்சுகல் அணியின் கோல் எண்ணிக்கை 15.
இன்றைய போட்டியில் ககா விளையாட மாட்டார். கடந்த போட்டியில் ரெட் கார்டு கொடுக்கப்பட்டதால் இன்றைய போட்டியில் அவர் விளையாட முடியாது. இந்த இடத்தை நிரப்ப பயிற்சியாளர் துங்கா சில திட்டங்களை வகுத்துள்ளார். மேலும், முக்கிய வீரரான எலேனோவும் காயமடைந்திருப்பதால் விளையாடுவதில் சிக்கல் நிலவுகிறது.
இதேபோல போர்ச்சுகல் அணியின் வீரர் டெகோவும் காயமடைந்துள்ளார். அவர் விளையாடுவதிலும் சிக்கல் காணப்படுகிறது. இவர் பிரேசிலில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரேசிலைப் பொறுத்தவரை மைகான் சூப்பர் ஸ்டார் வீரராக விளங்குகிறார். போர்ச்சுகல் அணியைப் பொறுத்தவரை டியாகோ, ரொனால்டோ, பேபியோ கான்டிரா ஆகியோர் உள்ளனர்.
போர்ச்சுகல் அணி குறித்து ரசிகர்கள் கூறுகையில், போர்ச்சுகல் அணி கடந்த சில போட்டிகளாகவே புள்ளிவிவரங்களுக்கு அப்பாற்பட்ட முடிவைத் தந்து தருகிறது. வெல்லும் என நினைக்கும்போது டிரா செய்து விடுகிறது. டிரா ஆகும் என நினைத்தால் அபாரமான வெற்றியைப் பெறுகிறார்கள். ஆனால் தோற்கும் வகையில் அவர்கள் ஆட்டம் இல்லை என்பது மகிழ்ச்சிக்குரியது. அனைத்து வீரர்களும் ஒருங்கிணைந்து ஆடுவது பார்க்கவே அழகாக உள்ளது என்கிறார்கள்.
இன்றைய போட்டியில் பிரேசில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டுமா அல்லது ரொனால்டோ அன் கோவின் நெருக்கடிகளுக்கு இரையாகுமா என்பது பெரும் எதிர்பார்ப்புக்குரிய ஒன்றாகியுள்ளது.
myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.
Allow Notifications
You have already subscribed
Story first published: Wednesday, December 7, 2011, 18:39 [IST]