நேற்று நடந்த விறுவிறுப்பான போட்டியில், நடப்புச் சாம்பியன் இத்தாலியை, ஸ்லோவேகியா 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி உலகக் கோப்பை போட்டித் தொடரை விட்டு வெளியேற்றியது.
பிரான்ஸைத் தொடர்ந்து முதல் சுற்றோடு உலகக் கோப்பைப் போட்டித் தொடரிலிருந்து வெளியேறும் 2வது பெரிய அணியாக இத்தாலி அணி இணைந்துள்ளது.
இத்தாலி ரசிகர்களை இந்த தோல்வி பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எதிர்பாராமல் நடந்து விட்ட இந்த தோல்விக்கு முழுக் காரணம் ஸ்லோவேகியா வீரர் விட்டக் போட்ட இரண்டு கோல்களே காரணம்.
ஆட்டத்தின் 25வது நிமிடத்திலேயே ராபர்ட் விட்டக் அபாரமான கோலடித்து இத்தாலிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.
அதேபோல 73வது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோலடித்தார். இதன் மூலம் இத்தாலி நிலைகுலைந்தது. இந்த நிலையில் இத்தாலியின் நதாலே கடுமையாகப் போராடி 81வது நிமிடத்தில் ஒருகோலடித்து இத்தாலிக்கு நம்பிக்கை அளித்தார். ஆனால், 89வது நிமிடத்தில் ஸ்லோவேகியாவின் கோபுனெக் இன்னொரு கோலைப் போட்டு ஸ்லோவேகியாவை வலுப்படுத்தி விட்டார்.
அதன் பிறகு முழுநேரம் முடிந்து, ஸ்டாப்பேஜ் டைமின் 2வது நிமிடத்தில் இத்தாலி வீரர் குவாஜிரெல்லா ஒரு கோலடித்தும் கூட பயன் இல்லாமல் போனது.
கடுமையாகப் போராடியும் இத்தாலியால் ஸ்லோவேகியாவை வெல்ல முடியாமல் போய் விட்டது. அத்தோடு உலகக் கோப்பைப் போட்டித் தொடரிலிருந்தும் அது தற்போது வெளியேற்றப்பட்டு விட்டது.
எப் பிரிவில் இடம் பெற்றிருந்த இத்தாலி தனது 3 போட்டிகளில் இரண்டு டிரா, ஒரு தோல்வி என வெறும் 2 புள்ளிகளுடன் கடைசி இடத்திற்குத் தள்ளப்பட்டு அவமானப்பட்டுள்ளது.
முதலிடத்தைப் பிடித்த பராகுவேயும், 2வது இடத்தைப் பிடித்த ஸ்லோவேகியாவும் நாக் அவுட் ரவுண்டுக்கு முன்னேறின.
இத்தாலி - ஒரு மோசமான வரலாறு
4 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்ற அணி இத்தாலி. இதுவரை நடந்துள்ள (தென் ஆப்பிரி்ககாவையும் சேர்த்து) 19 உலகக் கோப்பைப் போட்டிகளில் 17 முறை கலந்து கொண்டுள்ளது.
1934, 1938, 1982, 2006 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை வென்ற அபாரமான அணி இத்தாலி. 1970, 94 ஆகிய போட்டிகளில் 2வது இடத்தைப் பிடித்தது. 1990ல் இத்தாலியில் நடந்த போட்டித் தொடரில் 3வது இடத்தைப் பிடித்தது.
அபாரமான வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட இத்தாலி மோசமான தோல்வியைச் சந்திப்பது இது முதல் முறையல்ல.
1950 உலகக் கோப்பைப் போட்டியில் நடப்புச் சாம்பியனாக கலந்து கொண்டது இத்தாலி. அந்தத் தொடரிலும் முதல் சுற்றோடு மூட்டையைக் கட்டியது இத்தாலி.
1986ம் ஆண்டு அர்ஜென்டினாவில் நடந்த போட்டித் தொடரின்போதும், பிரான்சிடம் 2-0 என்ற கோல் கணக்கில் தோல்வியுற்ற சீக்கிரமே வெளியேறியது இத்தாலி.
இத்தாலி அணியின் தோல்விக்கு தானே முழுப் பொறுப்பு ஏற்பதாக பயிற்சியாளர் மார்செல்லோ லிப்பி கூறியுள்ளார்.
நடந்த அனைத்துக்கும் நானே பொறுப்பேற்கிறேன். இன்னும் நன்றாக செய்திருக்க வேண்டும், செய்திருக்கலாம். ஆனால் முடியாமல் போனதற்காக வருத்தப்படுகிறேன், அனைவருக்கும் எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் லிப்பி.
கடந்த தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இத்தாலியும், ரன்னர் ஆன பிரான்ஸும், இந்த முறை முதல் சுற்றோடு நடையைக் கட்டியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.
Allow Notifications
You have already subscribed
Story first published: Wednesday, December 7, 2011, 18:39 [IST]