அதிரடியான ஆட்டத்திற்கு உருகுவே தயாராகி விட்டது. இன்று நடைபெறும் முதலாவது காலிறுதிக்கு முந்தைய ஆட்டத்தில் தென் கொரியாவை அது சந்திக்கிறது.
ஆஸ்கர் டாபரேஸின் பயிற்சியின் கீழ் கட்டுக்கோப்பான அணியாக திகழும் உருகுவே, டிபன்ஸிலும் சரி, அட்டாக்கிலும் சரி சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் சரிவிகித திறமைகளுடன் கூடிய சில அணிகளில் உருகுவேயும் ஒன்றாக உள்ளது.
மறுபக்கம் தென் கொரியா. காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முதல் முறையாக அது தகுதி பெற்றுள்ளது. இதுவே அந்த அணிக்குப் பெரிய சாதனை. இன்றைய போட்டியில் வென்றால் காலிறுதிப் போட்டி என்பது தென் கொரியாவுக்கு மிகப் பெரிய விஷயம். எனவே கடைசி வரை வெற்றிக்கு அது போராடும் என்பதில் சந்தேகம் இல்லை.
இன்றைய போட்டியில் வெல்லும் அணி அமெரிக்கா அல்லது கானாவை ஜூலை 2ம் தேதி ஜோஹன்னஸ்பர்க்கில் நடைபெறும் காலிறுதிப் போட்டியில் சந்திப்பார்கள்.
புள்ளிவிவரத் தகவல்களை வைத்துப் பார்த்தால் உருகுவே முன்பு தென் கொரியா ஒரு கொசு போலத்தான் தெரியும். இரு அணிகளும் இதுவரை நான்கு முறை மோதியுள்ளன. நான்கிலும் உருகுவேதான் வென்றுள்ளது. உருகுவே அணி 7 கோல்களை போட்டுள்ளது. ஆனால் தென் கொரியா ஒரே ஒரு கோல் மட்டுமே அடித்துள்ளது.
எனவே இன்றைய போட்டியிலும் உருகுவேயே சாதிக்கும் என்ற பொதுவான நம்பிக்கை உள்ளது.
அதேசமயம், தென் கொரிய அணி டிபன்சில் அட்டகாசமாக உள்ளது. கோல் போட முடியாவிட்டாலும் கூட கோல் போட முடியாத அளவுக்கு நெருக்கடியைக் கொடுக்கக் கூடிய வல்லமை அதனிடம் உள்ளது. குறிப்பாக அர்ஜென்டினா, நைஜீரிய அணிகளுக்கு எதிராக இந்தத் திறமையை அது காட்டி அவர்களை டென்ஷன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
லீக் சுற்றில், அர்ஜென்டினாவிடம் 4-1 என்ற கோல் கணக்கில் தென் கொரியா தோற்றிருந்தாலும் கூட போராட்டத்தை அவர்கள் கடைசிவரை விடவில்லை. அதாவது கடைசி வரை முயன்று பார்த்தார்கள். அது ஒரு பாசிட்டிவான மனப்பான்மையாகும்.
சுற்றுப் போட்டிகளில் கேப்டன் பார்க் ஜி சுங் சிறப்பாக ஆடினார். இன்றும் அவரிடமிருந்து கோல்களை எதிர்பார்க்கலாம்.
அதேபோல உருகுவே அணியின் தூண் போல விளங்குகிறார் டியகோ போர்லான்.
இன்றைய போட்டி குறித்து உருகுவே பயிற்சியாளர் ஆஸ்கர் கூறுகையில், கடுமையான அணி நாங்கள் என்பதை சுற்றுப் போட்டிகளில் நிரூபித்தோம். இப்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளோம். இங்கு முழு மூச்சுடன், முழு திறமையுடன் விளையாடுவோம். எங்களை யாரும் சாதாரணமாக நினைத்து விடக் கூடாது என்றார்.
தென் கொரிய கேப்டன் பார்க் கூறுகையில், அர்ஜென்டினாவுடன் ஆடிய போட்டி சில பாடங்களை எங்களுக்குக் கற்றுக் கொடுத்துள்ளது. அதிலிருந்து லத்தீன் அமெரிக்க அணிகள் குறித்த ஒரு ஐடியா கிடைத்துள்ளது. அதைப் பயன்படுத்தி இன்று உருகுவேயை சமாளிக்க முயற்சிப்போம். கோல்களைத் தடுப்பதில் நாங்கள் ஸ்பெஷலிஸ்டுகள். அதேசமயம் கோலடிக்கவும் எங்களது முழுத் திறமையை பயன்படுத்துவோம் என்றார்.
சரி, ரசிகர்கள் கருத்து என்ன ...?
கொரியாவுக்கு இது மிகவும் கடினமான போட்டி. அர்ஜென்டினாவுடன் ஆடியபோது 4 கோல்களை வாங்கியது தென் கொரியா. இத்தனைக்கும் அவர்களிடம் நல்ல டிபென்ஸ் உள்ளது. அதுபோல இப்போது நடந்து விடாமல் தடுக்க புதிய உத்திகளுடன் தென் கொரியா ஆடினால் சாதகமான நிலை ஏற்படும் என்று கூறுகிறார்கள் ரசிகர்கள்.
myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.
Allow Notifications
You have already subscribed
Story first published: Wednesday, December 7, 2011, 18:39 [IST]