காலிறுதிக்கு நுழையப் போவது அமெரிக்காவா, கானாவா என்று கேட்டால், பதில் சொல்வது கொஞ்சம் கஷ்டம்தான். காரணம், இரு அணிகளும் அப்படிப்பட்ட அணிகள்.
கடைசி நேரத்தில் எதையாவது செய்து போட்டியின் முடிவை மாற்றி விடும் 'போக்கிரித்தனமான' அணி அமெரிக்கா. இங்கிலாந்தின் தலையில் அப்படித்தான் முன்பு மண்ணைத் தூவிப் போட்டது. பிறகு ஸ்லோவேனியாவுடன் டிரா செய்தது. அல்ஜீரியாவுடனான போட்டி கிட்டத்தட்ட டிரா ஆகியிருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் போட்ட கோலால் அமெரிக்கா வெற்றி பெற்று விட்டது.
இப்படி கடைசி நிமிடம் வரை இவர்கள் இப்படித்தான் என்று நிச்சயமாக சொல்ல முடியாத ஒரு அணியாக அமெரிக்கா திகழ்கிறது.
லீக் போட்டியில் 2 டிரா மற்றும் ஒரு வெற்றியுடன் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு வந்துள்ளது அமெரிக்கா.
கானாவைப் பொறுத்தவரை, ஒரு வெற்றி, ஒரு டிரா, ஒரு தோல்வியுடன் நாக் அவுட் ரவுண்டுக்கு வந்துள்ளது.
இரு அணிகளுமே அட்டாக்கில் ஆர்வம் கொண்டவை. எந்தக் காரணத்தைக் கொண்டும் டிபன்ஸை விரும்பாத வித்தியாசமான அணிகள் முடிந்தவரை முட்டிப் பார்த்து விடுவது என்ற வேகத்துடன் விளையாடக் கூடிய அணிகள் என்பதால் இவர்களின் ஆட்டம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
சைக்காலஜிக்கலாக கானா வீரர்கள் படு ஸ்டிராங்காக உள்ளனர். அந்த விஷயத்தில் அமெரிக்கா சற்று குறைவுதான். அதே சமயம் அமெரிக்கர்கள் கடைசி நேரம் வரை ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா என்பதைப் பார்த்து சந்தில் சிந்து பாடக் கூடியவர்கள்.
கடந்த உலகக் கோப்பைப் போட்டியின்போது அமெரிக்காவை 2-1 என்ற கோல் கணக்கில் வெளியேற்றிய அணி கானா என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இன்றைய போட்டியில் கானாவை பந்தாடி பழி தீர்க்க அமெரிக்கா முயலும் என்பதில் சந்தேகம் இல்லை.
அமெரிக்க அணியைப் பொறுத்தவரை முக்கிய துருப்புச் சீட்டாக லான்டன் டோனவான் இருப்பார். இவர்தான் கடைசி சுற்றுப் போட்டியில் கடைசி நேரத்தில் கோலடித்து அல்ஜீரியாவை தோற்கடிக்க முக்கியக் காரணம்.
அதேபோல அசமோ கியான், கானாவின் முக்கிய வீரராக திகழ்வார். இந்த ஆண்டில் கானா ஆடிய போட்டிகளில் மொத்தம் 9 கோல்களை அடித்துள்ளது. அதில் 6 கோல்களைப் போட்டவர் கியான் என்பது குறிப்பிடத்தக்கது.
கியான் களம் புகுந்து விளையாடத் தொடங்கி விட்டால் அவரைத் தடுப்பது கடினம் என்பதால் அவரைக் குறி வைத்து அமெரிக்கத் தரப்பு புதிய உத்திகளை வகுத்துக் காத்திருக்கிறதாம்.
இவர்கள் தவிர அமெரிக்காவின் கிளின்ட் டெம்ப்சியும், கானாவின் ஜான் பான்ட்சிலும் கவனிப்புக்குரிய வீரர்கள். இவர்கள் இருவரும் இங்கிலீஷ் பிரீமியர்லீக்கில், புல்ஹாம் அணிக்காக ஆடும் வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இது உலகக்கோப்பை போட்டியாச்சே, விட மாட்டார்கள் இருவரும்.
கானா வீரர் கியான் கூறுகையில், அமெரிக்கா நல்ல அணி, உறுதியான அணி, நன்றாக ஓடுகிறார்கள், நன்றாகவும் ஆடுகிறார்கள். இருப்பினும் அவர்களை வெல்லும் திறமை எங்களிடம் உள்ளது என்றே நினைக்கிறேன் என்றார் தன்னம்பிக்கையுடன்.
அமெரிக்க பார்வர்ட் வீரர் ஜோஸி அல்டிடோர் கூறுகையில், இன்னும் 2 வெற்றிகளை நாங்கள் குறி வைத்துள்ளோம் (கால் இறுதி வரை). அதற்குப் பிறகும் கூட நாங்கள் போகக் கூடியவர்கள்தான். முடியாதது என்று எதுவும் இல்லை. உலகக் கோப்பையை வெல்லும் கனவுடன்தான் இங்கு வந்துள்ளோம் என்றார் மிகப் பெரிய தன்னம்பிக்கையுடன்.
இந்த இரு அணிகளில் யார் பெஸ்ட் என்ற கேள்வி வரும்போது ரசிகர்களின் பதில் - எப்படியும் ஒன்று தோற்றாக வேண்டும். அது கஷ்டமான ஒன்றுதான். இருப்பினும், கானா சிறந்த அணியாக தெரிகிறது. எனவே அது காலிறுதிக்குப் போக வேண்டும் என்கிறார்கள்.
வெல்லப் போவது யாரோ?
myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.
Allow Notifications
You have already subscribed
Story first published: Wednesday, December 7, 2011, 18:39 [IST]