மெக்சிகோ 'அலை'யை அடக்குமா அர்ஜென்டினா?

படு காட்டமான போட்டி என்று கூறப்படக் கூடியது இந்த அர்ஜென்டினா, மெக்சிகோ இடையிலான மோதல். காரணம் இரு அணிகளும் அப்படி ஒரு வைரிகள். எப்படி இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் ஆடினால் அனல் பறக்குமோ, அப்படி. அதை விட கூடுதலாகவே சூடு இருக்கும் இவர்கள் மோதினால்.
2006ல் நடந்த உலகக் கோப்பைப் போட்டியிலும் கூட காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்த இரு அணிகளும் மோதின. அப்போது அர்ஜென்டினா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இன்று மீண்டும் இரு அணிகளும் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சந்திப்பதால் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. ஆர்ப்பரிப்போடு காணப்படும் மெக்சிகோ, அர்ஜென்டினாவை வீழ்த்தி விடுமா என்ற எதிர்பார்ப்பு ஏகமாக உள்ளது. ஆனால் அதன் அலைபாய்தலை அடக்கி வெல்வோம் என்ற நம்பிக்கையில் அர்ஜென்டினா வீரர்கள் உள்ளனர்.
தனது பிரிவு லீக் ஆட்டம் அனைத்திலும் வென்ற அணி அர்ஜென்டினா. பயிற்சியாளர் மாரடோனாவின் வழிகாட்டுதலின் கீழ் லியோனல் மெஸ்ஸி, டாவேஸ் உள்ளிட்ட வீரர்களின் அபார ஆட்டத்தால் அர்ஜென்டினா வலுவாக உள்ளது.
அதேசமயம் மெக்சிகோவும் சளைத்ததாக தெரியவில்லை. மார்க்கஸ், கார்லோஸ் சல்சிடோ, குவார்டாடோ ஆகியோர் அர்ஜென்டினாவை பதம் பார்க்க காத்திருக்கின்றனர்.
அர்ஜென்டினாவை பழி தீர்க்க மெக்சிகோவும், அது நடந்து விடாமல் தடுக்க அர்ஜென்டினாவும் காத்திருப்பதால் இன்றைய போட்டி தீபாவளிப் பட்டாசாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இரு அணிகளும் கடந்த காலங்களில் 14 போட்டிகளில் மோதியுள்ளன. அதில், அர்ஜென்டினா 7 முறை வென்றுள்ளது. 2ல் மட்டுமே மெக்சிகோ வென்றுள்ளது. 5 போட்டிகள் டிரா ஆகியுள்ளன.
மெக்சிகன் அலையை அடக்குமா அர்ஜென்டினா? பொறுத்திருந்து பார்ப்போம்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:39 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications