உருகுவேயின் லூயிஸ் சுவாரஸ் அபாரமான இரண்டு கோல்களைப் போட்டு தென் கொரியாவைப் பின்னுக்குத்தள்ளி தனது அணியை காலிறுதிக்குள் கொண்டு போய் விட்டார்.
உருகுவே 2 கோல்களையும், தென் கொரியா ஒரு கோலும் போட்டது. இந்த வெற்றியின் மூலம் 1970ம் ஆண்டுக்குப் பின்னர் முதல் முறையாக காலிறுதிப் போட்டிக்கு உருகுவே தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
போர்ட் எலிசபெத்தில் நடந்த இந்த விறுவிறுப்பான முதல் காலிறுதிக்கு முந்தைய ஆட்டம் ரசிகர்களுக்கு சரியான விருந்தாக அமைந்தது. இரு அணியினரும் புயல் வேகத்தில் ஆடினர். வென்றால் அடுத்த சுற்று, வெல்லாவிட்டால் வீட்டுக்கு என்ற நிலை என்பதால் இரு அணியினரும் கோலடிக்க கடுமையாக முயன்றனர்.
எடுத்த எடுப்பிலேயே உருகுவேக்கு உயிர் கொடுத்தார் சுவாரஸ். 8வது நிமிடத்திலேயே அபாரமான கோலைப் போட்டு உருகுவேக்கு முன்னிலை ஏற்படுத்திக் கொடுத்தார்.
இதையடுத்து கோலடிக்க தென் கொரியா கடுமையாக முயன்றது. அதைத் தடுத்து மேலும் ஒருகோலைப் போட்டு நிலையை ஸ்திரப்படுத்த உருகுவேயும் முயன்றதால் போட்டி விறுவிறுப்பானது. இதனால் முதல் பாதி ஆட்டத்தில் மேலும் ஏதும் கோல் விழவில்லை.
2வது பாதி ஆட்டத்தின்போது, 68வது நிமிடத்தின்போது லீ சுங் யங் அபாரமான கோலடித்து உருகுவேக்கு அதிர்ச்சி அளித்தார்.
இதனால் இன்னும் தீவிரமாக கோலடிக்கும் முயற்சிகளில் இறங்கிய உருகுவே வீரர்களுக்கு மீண்டும் சுவாரஸ், சுவாசம் கொடுத்தார். 80வது நிமிடத்தில் அவர் போட்ட கோல் மெய் சிலிர்க்க வைத்தது. உலகக் கோப்பைப் போட்டிகளின் மிகச் சிறந்த கோல்கள் வரிசையில் இந்த கோலுக்கும் நிச்சயம் இடம் உண்டு.
அதன் பின்னர் தென் கொரியா நிலை குலைந்தது. அடுத்த கோலைப் போட முயன்ற அதன் முயற்சி தோல்வியில் முடிந்ததால் உருகுவே 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று முதல் ஆளாக காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.
Allow Notifications
You have already subscribed
Story first published: Wednesday, December 7, 2011, 18:39 [IST]