தென் அமெரிக்காவின் பிரேசில்- சிலி இன்று மோதல்-வெல்லுமா பிரேசில்?

பிரேசிலுக்கு இந்த முறை பெரும் நெருக்கடி. காரணம், ஐந்து முறை சாம்பியன் ஆன அணி என்பதாலும், தர வரிசையில் நம்பர் ஒன்னாக இருப்பதாலும், கோடானு கோடி ரசிகர்கள் பிரேசில்தான் கப் வாங்கும் என்று நம்பிக்கையுடன் இருப்பதாலும், ஒவ்வொரு போட்டியையும் அலேக் ஆக வெல்ல வேண்டிய நிர்ப்பந்தம். இருந்தாலும் லேசான தடுமாற்றத்துடன்தான் லீக் சுற்றை முடித்தது பிரேசில்.
எனவே இன்றைய போட்டியில் பிரேசில் சற்று சுதாரிப்போடு ஆடினால்தான் உண்டு. இல்லாவிட்டால் சிலி, பெரிய கிலி ஏற்படுத்தி விடும் வாய்ப்பு உள்ளது.
இன்றைய போட்டியில் பிரேசில்தான் வெல்லும் என்பது பொதுவான கணிப்பு. இருப்பினும் சிலி இதற்கு முன்பு 2 உலகக் கோப்பைப் போட்டிகளில் பிரேசிலிடம் தோற்றுள்ளதால், இன்றைய போட்டியில் வெல்ல தீவிரமாக முயலும்.
இதற்கு முன்பு 1962ம் ஆண்டு நடந்த உலககக் கோப்பைப் போட்டியின் அரை இறுதியில், 4-0 என்ற கோல் கணக்கிலும்,1998ல் காலிறுதிக்கு முந்தைய ஆட்டத்தில் 4-1 என்ற கோல் கணக்கிலும் பிரேசில், சிலியை வீழ்த்தியுள்ளது.
பிரேசில் அணியில் ராபின்ஹோ, காகா, லூயிஸ் பேபியானோ என ஜாம்பவான்கள் உள்ளனர். அதேசமயம், சிலி அணியில் சில முக்கிய வீரர்கள் ஆட முடியாத நிலை. எனவே அதற்கு சற்று சங்கடங்களும் உள்ளன. அதைத் தாண்டி அவர்கள் விளையாடியாக வேண்டும்.
ஒரே கண்டத்து நாடு என்றாலும் கூட போட்டி என்று வந்து விட்டால் சிங்கமாக பாய்ந்தாக வேண்டியதுதான் என்ற எண்ணத்தில்தான் சிலி உள்ளது.
சிலி பயிற்சியாளர் மார்சலோ பியல்சா கூறுகையில், பயமுறுத்தக் கூடிய அணியாக தங்களை பிரேசில் அணியினர் மாற்றி வைத்துள்ளனர். இருப்பினும் இந்த முறை அவர்களது ஆட்டத்தில் நயம் இல்லை. பலம் மட்டுமே உள்ளது. அந்த பலவீனத்தை நாங்கள் பயன்படுத்திக் கொள்ளப் பார்ப்போம் என்றார்.
பிரேசில் சூப்பர் ஸ்டார் பேபியானோ கூறுகையில், இது முக்கியமான போட்டி. எனவே தடுப்பாட்டத்தை தூரப் போட்டு விட்டு ஆக்ரோஷமாக ஆடுவோம். இனிமேல் வரும் ஒவ்வொரு போட்டியும் முக்கியமானது என்பதை உணர்ந்துள்ளோம் என்கிறார்.
பிரேசிலை வீழ்த்துவது சாதாரண விஷயமல்ல. ஆனால் சிலி அதைச் செய்யுமா என்ற எதிர்பார்ப்பு ஏகமாகவே உள்ளது. 'பங்காளி'ச் சண்டையில் வெல்லப் போவது யாரோ...?
Story first published: Wednesday, December 7, 2011, 18:39 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications