உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியின் முக்கிய சுற்று ஜூலை 2ம் தேதி தொடங்குகிறது. 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் நடைபெறும் காலிறுதிப் போட்டிகளில் வெல்லும் நான்கு அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.
எதிர்பாராமல் உள்ளே நுழைந்த அணிகள் தவிர பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஜாம்பவான் அணிகளும் மல்லுக்கட்டவுள்ளதால் ரசிகர்களிடையே ஆர்வம் கரைபுரண்டோடுகிறது.
ஜூலை 2ம் தேதி 2 போட்டிகள் நடைபெறவுள்ளன. முதல் போட்டியில் உருகுவேயும், கானாவும் மோதுகின்றன. அடுத்த போட்டியில் பிரேசிலும், நெதர்லாந்தும் மோதுகின்றன.
3ம் தேதி நடைபெறும் போட்டிகளில் அர்ஜென்டினா, ஜெர்மனி ஒரு போட்டியிலும், ஸ்பெயின், பராகுவே இன்னொரு போட்டியிலும் மோதவுள்ளன.
மேற்கண்ட அணிகளில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பவை அர்ஜென்டினா, பிரேசில், ஸ்பெயின், நெதர்லாந்து, ஜெர்மனி ஆகியவைதான். இவை எப்படியும் வென்று விடும் என்ற பொதுவான எதிர்பார்ப்பு உள்ளது.
இருப்பினும் அர்ஜென்டினாவும், ஜெர்மனியும் எதிரெதிர் மோதுவதால் ரசிகர்களிடையே பரபரப்பு தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கிறது. யார் வென்றாலும் கால்பந்து ரசிகர்களுக்கு ஜாலிதான். ஆனாலும் ஒரு வலுவான அணி வெளியேறுகிறதே என்ற வருத்தமும் கூடவே இருக்கும்.
அதேபோல பிரேசில், நெதர்லாந்து போட்டியும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நெதர்லாந்து இந்த தொடரில் அசத்தி விட்டது. எனவே இந்த முறை பிரேசிலுக்கு அதிக நெருக்கடியைக் கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்பெயின் அணியும் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளது. பராகுவேயும் சும்மா இல்லை. எனவே இந்த அணிகளின் மோதலும் தீப்பறக்கும்.
முக்கியமாக சொல்ல வேண்டிய அணி கானா. இந்த குட்டி அணி சுற்றுப் போட்டிகளிலும், காலிறுதிக்கு முந்தைய சுற்றிலும் அசத்தி விட்டது. எனவே உருகுவேயையும் கானா வென்று புதிய சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏகமாக உள்ளது.
காலிறுதிக்கு வந்துள்ள அணிகளில் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஒரே அணி கானா மட்டுமே.
ஐரோப்பாவைச் சேர்ந்த அணிகள் ஸ்பெயின், நெதர்லாந்து, ஜெர்மனி ஆகியவை. மற்ற நான்கு அணிகளும் தென் அமெரிக்காவைச் சேர்ந்தவையாகும்.
காலிறுதிப் போட்டிகளுக்காக ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றனர். எந்தக் கால் அரைஇறுதிக்கு ஓடப் போகிறது என்ற ஆர்வம் கலந்த எதிர்பார்ப்பு அது.
myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.
Allow Notifications
You have already subscribed
Story first published: Wednesday, December 7, 2011, 18:39 [IST]