போர்ச்சுகல் போச்சு!

நடப்பு உலகக் கோப்பைப் போட்டியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய அணிகளில் ஒன்று போர்ச்சுகல். அந்த அணியின் சூப்பர் ஸ்டார் வீரர்களான ரொனால்டோ, டியாகோ உள்ளிட்டோரின் அபாரமான ஆட்டத்தால் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டது.
குறிப்பாக வட கொரியாவுக்கு எதிரான போட்டியின்போது போர்ச்சுகலின் ஆட்டம் அபாரமாக இருந்தது. இதனால் கோப்பையை வெல்லக் கூடிய அணிகளின் வரிசையில் போர்ச்சுகலையும் ரசிகர்கள் சேர்த்து வைத்திருந்தனர். ஆனால் நேற்று எல்லாம் தரைமட்டமாகி விட்டது.
நேற்று நடந்த போட்டியில் தனது பரம்பரை எதிரியான ஸ்பெயினிடம் 0-1 என்ற கணக்கில் தோற்றுப் போய் விட்டது போர்ச்சுகல்.
இந்தப் போட்டிக்கு முன்பு தொடர்ந்து 19 போட்டிகளில் வென்ற பெருமையுடன் களம் கண்டது போர்ச்சுகல். ஆனால் 20வது வெற்றியைப் பெற முடியாமல் போய் விட்டது.
இரு அணிகளும் ஆரம்பத்திலிருந்தே கடுமையாக மோதின. இதனால் கோல் போடும் முயற்சிகளில் இரு அணிகளுக்கும் பலன் கிடைக்கவில்லை. முதல் பாதி ஆட்டம் கோல் ஏதும் இல்லாமல் முடிந்தது.
இந்த நிலையில் 2வது பாதி ஆட்டத்தின்போது, 63வது நிமிடத்தில் டேவிட் வில்லா ஸ்பெயினுக்கான கோலைப் போட்டார்.
ஆட்டத்தின் கடைசி நேரத்தில், அதாவது 89வது நிமிடத்தில் போர்ச்சுகல் வீரர் காஸ்டோவுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டதால் போர்ச்சுகல் நிலை மேலும் மோசமடைந்தது.
அதற்கு மேல் போர்ச்சுகலால் கோல் ஏதும் போட முடியாததால் போட்டி 1-0 என்ற கணக்கில் ஸ்பெயினுக்கு சாதகமாக முடிந்தது.
இதன் மூலம் காலிறுதிக்கு முன்னேறிய ஸ்பெயி்ன் அப்போட்டியில் பராகுவேயை சந்திக்கிறது.
நேற்று வில்லா அடித்த கோல், இந்தத் தொடரில் அவர் போட்ட 4வது கோலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய போட்டியில் போர்ச்சுகல் வீரர் ரொனால்டோ அணிக்கு பெரிய அளவில் உதவ முடியாமல் போனது போர்ச்சுகலுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி விட்டது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:39 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications