ஃபிபா உலகக்கோப்பை.. அகதிகள் முகாம் டூ ஆஸ்திரேலிய அணி.. அடையாளத்தை உருவாக்கும் நாடற்றவர்கள்!
தோஹா: கால்பந்து உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில், ஆப்பிரிக்க அகதிகள் முகாமில் வளர்ந்த மூன்று வீரர்கள் களமிறங்க உள்ளனர்.
போர், வறுமை, வன்முறை, பயங்கரவாதம் என பல காரணங்களால் சொந்த நாட்டை பிரிந்து வேறு நாடுகளுக்கு அடைக்கலம் நாடி செல்பவர்களே அகதிகள். அப்படி அகதிகளாக மற்ற நாடுகளுக்கு செல்லும் மக்கள், முதலில் இழக்க தொடங்குவது அவர்களின் அடையாளத்தை தான்.
பல நாடுகளால் நிராகரிக்கப்பட்டு, குடிகளாக ஏற்கப்படாமல், விரட்டியடிக்க துடிக்கும் பலருக்கு மத்தியில் அகதிகளின் குரல் ஓங்கி ஒலிப்பது அவ்வளவு எளிதல்ல. தமிழ்நாட்டில் பிறந்த அனைவருக்கும் இலங்கையில் இருந்து அகதிகளாக வருவோரின் துயரங்கள் அறிந்தவையே. குறைந்தபட்சம் அகதிகள் முகாம் பற்றி கேள்விப்பட்டிருப்போம்.

ஆஸி. அகதிகள் முகாம்
அப்படியான ஒரு அகதிகள் முகாமில் பிறந்த மூன்று பேர், நாளை தொடங்கவுள்ள கால்பந்து உலகக்கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்காக களமிறங்கப் போகிறார்கள். தெற்கு சூடானில் இருந்து அடைக்கலம் தேடி ஆஸ்திரேலியாவுக்கு வந்த ஏராளமானோரில் இந்த மூன்று வீரர்களின் பெற்றோரும் இருக்கிறார்கள். ஆப்பிரிக்கா சமூகத்தைச் சேர்ந்த தாமஸ் டெங், ஆவர் மாபில் மற்றும் கரங் குவல் ஆகியோர் ஆஸ்திரேலியாவில் உள்ள அகதிகள் முகாமிலேயே வளர்ந்தவர்கள்.

தேசிய அணிக்காக அகதிகள்
அகதிகளாக இருந்து ஆஸ்திரேலிய தேசிய அணிக்கு விளையாடுவது குறித்து மூன்று வீரர்களும் பேசுகையில், சிறு குழந்தைகள் எங்களை கனவு நாயகர்களாக பார்க்கிறார்கள். எங்கள் இந்த வளர்ச்சி அவர்களுக்கு உத்வேகம் அளிப்பதை காண்கிறோம். இன்னும் சொல்லப்போனால், எங்களுக்கு புத்துணர்ச்சி ஏற்பட்டுள்ளது.

முகாம் வாழ்க்கை
ஆஸ்திரேலியாவில் உள்ள ஆப்பிரிக்கா மக்களுக்கான அகதிகள் முகாமில் வாழ்க்கை கடினமாக இருக்கும். சில நேரங்களில் தவறான பாதையை கூட தேர்ந்தெடுக்கும் சூழல்கள் உருவாகும். ஆனால் முகாம் சூழலில் இருந்து தேசிய அணிக்காக விளையாடுவதன் மகிழ்ச்சியை வார்த்தைகளால் சொல்ல முடியாது. குழந்தைகளாக இருக்கும் போது எங்கள் சமூகத்தில் இருந்து வளர்ச்சியடையும் மனிதர்கள் பார்க்கவே விரும்பி இருக்கிறோம். நாங்கள் இப்போது எங்கள் கதைகளையும், கஷ்டங்களையும் பேசுவதன் மூலம் ஆஸ்திரேலிய மக்கள் எங்களை பிரிந்துகொள்ள நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.

தெற்கு சூடான் அடையாளம்
தெற்கு சூடானை சேர்ந்த மக்கள், உலகின் பல்வேறு பகுதிகளில் அகதிகளாக இருக்கிறார்கள். அங்கிருக்கும் குழந்தைகளுக்கு நாங்கள் சொல்ல விரும்புவது, நாம் கடினமாகவும், உண்மையாக உழைத்தால் நிச்சயம் ஒருநாள் கனவை எட்டிப்பிடிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். பல நாடுகளால் விரட்டியக்கப்பட்டவர்கள், இன்று தங்களுக்கான அடையாளத்தை விடாபிடியாக கட்டி எழுப்பியுள்ளனர். இதனால் ஆஸ்திரேலிய அணி மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications