இனிமேலும் பொறுக்க முடியாது.. இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் அதிரடி நீக்கம்
டெல்லி: இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் அதிரடியாக பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கடந்த 2019 முதல் இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார் இகோர் ஸ்டிமாக்.
கடந்த 2023 அக்டோபர் உடன் அவரது ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது. அப்போது இந்திய அணி 2026 கால்பந்து உலகக் கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகளில் விளையாட வேண்டி இருந்ததால் அவரது ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டது. இந்திய அணி உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றால் ஸ்டிமாக்கின் ஒப்பந்தம் 2028 வரை நீட்டிக்கப்படும் என சொல்லப்பட்டது.

ஆனால், இந்திய அணி உலகக் கோப்பை தகுதிச்சுற்று போட்டிகளில் மோசமாக செயல்பட்டு உலகக் கோப்பையில் பங்கு பெறும் வாய்ப்பை இழந்தது. இதை அடுத்து இகோர் ஸ்டிமாக் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவரது பதவிக்காலத்தில் இந்திய அணியின் செயல்பாடு சராசரியாகவே இருந்தது.
கடந்த சில மாதங்களாக இந்திய அணி மோசமாக விளையாடியது. அது குறித்து விளக்கம் அளித்த இகோர் ஸ்டிமாக் தொடர்ந்து வாக்குறுதிகளை அளித்துக் கொண்டே வந்தார். ஆனால் எந்த வாக்குறுதியையும் அவர் நிறைவேற்றவில்லை. அதனால், இந்திய கால்பந்து சம்மேளனம் அவர் மீது கடும் அதிருப்தியுடன் இருந்தது.
தற்போது இந்திய அணி உலகக் கோப்பைக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்ததை அடுத்து அவர் நீக்கப்பட்டு இருக்கிறார். இகோர் ஸ்டிமாக் தாமாகவே தமது பதவியை விட்டு விலகுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் இந்திய அணியுடன் தொடர்ந்து பணியாற்ற விரும்பினார். இந்த நிலையில், இந்திய கால்பந்து சம்மேளனம் அவரை வலுக்கட்டாயமாக நீக்கி உள்ளது. இந்திய கால்பந்து அணிக்கு புதிய பயிற்சியாளரை நியமிக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications