FIFA: ஜோர்டானுக்கு ஏமாற்றம்.. 2-1 என வீழ்த்தி அடுத்த சுற்று வாய்ப்பை தக்கவைத்தது அல்ஜீரியா!
சான் பிரான்சிஸ்கோ: பிபா உலகக் கோப்பை 2026 தொடரின் லீக் போட்டியில் அறிமுக அணியான ஜோர்டானை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அல்ஜீரியா அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்தத் தோல்வியின் மூலம் உலகக் கோப்பை தொடரிலிருந்து ஜோர்டான் அணி அதிகாரப்பூர்வமாக வெளியேற்றப்பட்டது.
சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற இப்போட்டியின் முதல் பாதியில் அல்ஜீரியா அணி பந்தை அதிக நேரம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும், ஜோர்டானின் பலமான தற்காப்பு அரணை உடைக்க முடியாமல் திணறியது. இந்தச் சூழலில், ஆட்டத்தின் 36வது நிமிடத்தில் அல்ஜீரியா வீரர் ரமிஸ் ஜெரூக்கி செய்த தவற்றைப் பயன்படுத்திய ஜோர்டான் அணியின் நிஜார் அல் ரஷ்தான், தனது வலது காலால் ஒரு துல்லியமான கோல் அடித்து அணிக்கு 1-0 என முன்னிலை பெற்றுத் தந்தார். இதனால் முதல் பாதியில் ஜோர்டான் அணி முன்னிலை வகித்தது.

இரண்டாவது பாதியில் ஆட்டத்தின் வேகத்தை பன்மடங்கு அதிகரித்த அல்ஜீரியா அணி, ஜோர்டான் அணிக்கு கடுமையான அழுத்தத்தைக் கொடுத்தது. ஆட்டத்தின் 69வது நிமிடத்தில் நட்சத்திர வீரர் ரியான் மஹ்ரெஸ் வீசிய கார்னர் கிக் வாய்ப்பைப் பயன்படுத்தி, நதிர் பென்பூலி தலையால் முட்டி கோல் அடித்து ஆட்டத்தை 1-1 என சமன் செய்தார். ரியான் மஹ்ரெஸ் 2014 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக உலகக் கோப்பை போட்டியில் களம் இறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆட்டம் சமநிலையை எட்டிய பிறகு இரு அணிகளும் வெற்றி கோல் அடிக்க தீவிரமாக போராடின. இறுதியில், ஆட்டத்தின் 82வது நிமிடத்தில் கிடைத்த மற்றொரு கார்னர் வாய்ப்பில் அல்ஜீரியா வீரர் அமீன் கௌரி அபாரமாக கோல் அடித்து தனது அணிக்கு 2-1 என்ற கணக்கில் வெற்றியைத் தேடித்தந்தார்.
இந்தத் தோல்வியின் மூலம் உலகக் கோப்பையில் தனது முதல் புள்ளியைப் பெறும் ஜோர்டான் அணியின் கனவு கலைந்ததுடன், அவர்கள் தொடரிலிருந்தும் வெளியேறியுள்ளனர். அதேநேரத்தில், இந்த மாபெரும் வெற்றியின் மூலம் அல்ஜீரியா அணி தனது அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications
