ஆட்டத்தை திருப்பிய மெஸ்ஸி.. தோற்கும் நிலையில் இருந்து இங்கிலாந்தை வீழ்த்தி பைனல் சென்ற அர்ஜென்டினா
அட்லாண்டா: 2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரின் 2வது அரை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, அர்ஜென்டினா அணி தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது. இந்தப் போட்டியில் ஒரு கட்டத்தில் பின்தங்கி இருந்த அர்ஜென்டினா, இறுதி நிமிடங்களில் லியோனல் மெஸ்ஸியின் அசிஸ்ட்களால் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் அர்ஜென்டினா வீரர்கள் தவறுகள் செய்த போது மஞ்சள் அட்டையோ, சிவப்பு அட்டையோ காட்டப்படவில்லை. ஆனால் இங்கிலாந்து வீரர் ஒரு தவறை செய்த உடனே அவருக்கு மஞ்சள் அட்டை காட்டப்பட்டது. மேலும், அர்ஜென்டினாவுக்கு சாதகமாக நடுவர்கள் சில முடிவுகளை எடுத்ததாக சர்ச்சை எழுந்தது. அதற்கு மத்தியில் தான் அர்ஜென்டினா வெற்றி பெற்றுள்ளது.
அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் உள்ள மெர்சிடிஸ் பென்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், இரு அணிகளும் தொடக்கம் முதலே ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தின. முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்காத நிலையில், போட்டியின் 55வது நிமிடத்தில் இங்கிலாந்தின் அந்தோணி கார்டன் ஒரு அருமையான கோல் அடித்து தனது அணிக்கு 1-0 என முன்னிலை தேடித்தந்தார்.

85 வது நிமிடம் வரை ஆட்டம் அப்படியே சென்றது. அர்ஜென்டினா அணியால் கோல் அடிக்க முடியவில்லை. அதனால் இங்கிலாந்து அணி 1966ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆட்டத்தின் 85வது நிமிடத்திற்குப் பிறகு மெஸ்ஸியின் விஸ்வரூப ஆட்டம் தொடங்கியது. 86வது நிமிடத்தில் மெஸ்ஸி கொடுத்த துல்லியமான பாஸைப் பெற்று, என்சோ பெர்னாண்டஸ் தூரத்திலிருந்து ஒரு மின்னல் வேக கோல் அடித்து ஆட்டத்தை 1-1 என சமநிலைக்கு கொண்டு வந்தார்.
அதன் பின்னர், கூடுதல் நேரத்தில் (90+2 நிமிடத்தில்) மெஸ்ஸி உதைத்த துல்லியமான கிராஸ் பந்தை, மாற்று வீரராகக் களம் இறங்கிய லாடாரோ மார்டினெஸ் தலையால் முட்டி கோலாக மாற்றினார். ஆட்ட நேர முடிவில் அர்ஜென்டினா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இதன் மூலம், பிரேசிலின் காஃபுவிற்குப் பின் மூன்று உலகக் கோப்பை இறுதிப்போட்டிகளில் விளையாடும் 2வது வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை 39 வயதான லியோனல் மெஸ்ஸி படைக்க உள்ளார். ஞாயிற்றுக்கிழமை நியூஜெர்சியில் நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா அணி ஸ்பெயினை எதிர்கொள்கிறது. தோல்வியடைந்த இங்கிலாந்து அணி, சனிக்கிழமை மியாமியில் நடைபெற உள்ள 3வது இடத்திற்கான போட்டியில் பிரான்ஸை எதிர்கொள்ள உள்ளது.


Click it and Unblock the Notifications
