மெஸ்ஸி கோல் அடிக்கவில்லை.. ஆனாலும் சுவிட்சர்லாந்தை வீழ்த்திய அர்ஜென்டினா.. அரை இறுதிக்கு முன்னேற்றம்
கன்சாஸ் சிட்டி: 2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதிப் போட்டியில் சுவிட்சர்லாந்து அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா அணி அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. கூடுதல் நேரத்தில் ஜூலியன் ஆல்வரெஸ் மற்றும் லாடாரோ மார்டினெஸ் ஆகியோர் அடித்த கோல்கள் அர்ஜென்டினாவின் வெற்றியை உறுதி செய்தன.
கன்சாஸ் சிட்டி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியின் 10வது நிமிடத்தில், அர்ஜென்டினா வீரர் அலெக்சிஸ் மேக் அலிஸ்டர் ஒரு அபாரமான ஹெட்டர் கோல் மூலம் அணிக்கு 1-0 என முன்னிலை தேடித்தந்தார். இதற்கு லியோனல் மெஸ்ஸி கார்னர் கிக் மூலம் பந்தை பாஸ் செய்து உதவினார். இதன் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் 6 தொடர்களில் விளையாடி அதிக முறை (10 முறை) கோல் அடிக்க உதவிய வீரர் என்ற புதிய வரலாற்றுச் சாதனையை மெஸ்ஸி படைத்தார்.

போட்டியின் 67வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்தின் டான் என்டோயே ஒரு சிறப்பான கோல் அடித்து ஆட்டத்தை 1-1 என சமநிலைக்கு கொண்டு வந்தார். இதன் பின்னர், 72வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து வீரர் பிரீல் எம்போலோ சிவப்பு அட்டை பெற்று மைதானத்தை விட்டு வெளியேறியதால் அந்த அணி 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. எனினும், சுவிட்சர்லாந்து வீரர்கள் இரும்பு அரண் போல தடுத்து விளையாடியதால் ஆட்டம் கூடுதல் நேரத்திற்குச் சென்றது.
கூடுதல் நேரத்தில், போட்டியின் 112வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் ஜூலியன் ஆல்வரெஸ் 25 யார்டு தூரத்தில் இருந்து அடித்த அசாத்தியமான கோல் அர்ஜென்டினாவை மீண்டும் முன்னிலை பெறச் செய்தது. ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில் லாடாரோ மார்டினெஸ் மேலும் ஒரு கோல் அடித்து அர்ஜென்டினா அணியின் வெற்றியை 3-1 என உறுதி செய்தார்.
இந்தப் போட்டியில் மெஸ்ஸி கோல் எதுவும் அடிக்கவில்லை. இதை அடுத்து தொடர்ந்து 9 உலகக் கோப்பை போட்டிகளில் கோல் அடித்திருந்த மெஸ்ஸியின் சாதனைப் பயணம் இந்தப் போட்டியுடன் முடிவுக்கு வந்தது.
இந்த காலிறுதியில் வெற்றி பெற்ற அர்ஜென்டினா அணி, அடுத்ததாக புதன்கிழமை அட்லாண்டாவில் நடைபெற உள்ள அரை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது. 1986ஆம் ஆண்டில் மாரடோனாவின் புகழ்பெற்ற 'ஹேண்ட் ஆஃப் காட்' சம்பவத்திற்குப் பிறகு, உலகக் கோப்பையில் இந்த அர்ஜென்டினா - இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன. அதனால் இந்தப் போட்டி கால்பந்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications

