கொல்கத்தாவில் இன்று அர்ஜென்டீனா-வெனிசூலா மோதல்- ரசிகர்கள் பேரார்வம்

இந்தியாவில் நடைபெறவுள்ள முதலாவது சர்வதேச கால்பந்துப் போட்டி இது என்பதாலும், மிகப் பெரிய அணியான அர்ஜென்டீனா, தனது முழு அணியையும் களத்தில் இறக்கும் போட்டி என்பதாலும் இந்திய கால்பந்து ரசிகர்களிடையே இப்போட்டி குறித்து பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
1,20,000 பேர் அமரக்கூடிய சால்ட்லேக், யுப பாரதி கிரங்கன் ஸ்டேடியத்தில் இப்போட்டி நடைபெறுகிறது. 2 முறை உலகக் கோப்பையை வென்றுள்ள அர்ஜென்டீனா அணியின் ஸ்டார் வீரர் மெஸ்ஸியைக் காணத்தான் ரசிகர்களிடையே பெரும் ஆர்வம் கிளர்ந்தெழுந்துள்ளது.
24 வயதான மெஸ்ஸி, இரண்டு முறை உலக கால்பந்து வீரராக தேர்வு பெற்றவர். பீலே, மாரடோனா, ஜெர்ட் முல்லர், டியகோ போர்லான் போன்ற சூப்பர் ஸ்டார் வீரர்கள் வரிசையில் தற்போது வைக்கப்பட்டிருப்பவர் மெஸ்ஸி என்பதால் அவர் வந்து கொல்கத்தாவில் ஆடவிருப்பது ரசிகர்களை பெருமை கொள்ளச் செய்துள்ளது.
இருப்பினும் 1977ம் ஆண்டு பீலே தலைமையிலான பிரேசில் அணி, மோகன்பகான் அணியுடன் மோதிய காட்சிப் போட்டியின்போது நிலவிய பெரும் ஆர்வம் இப்போது இல்லை என்றே கூற வேண்டும். மேலும், சில மாதங்களுக்கு முன்பு மாரடோனா இங்கு வந்தபோது காணப்பட்ட மிகப் பெரிய பரபரப்பும் இப்போது இல்லை. காரணம், டிக்கெட் விற்பனையில் காணப்பட்ட மந்த நிலை.
இருப்பினும் அர்ஜென்டீனா அணியின் போட்டியைக் காண ரசிகர்களிடையே ஆர்வம் அதிகமாக இருப்பது உண்மை.
புதிய பயிற்சியாளர் சபெல்லாவின் தலைமையில் அர்ஜென்டீனா அணி தற்போது ஆடவிருக்கிறது. 2014ல் பிரேசிலில் நடைபெறவுள்ள உலகக் கோப்பையை வெல்லும் வேகத்துடன் உள்ள அர்ஜென்டீனா, வெனிசூலாவுக்கு எதிரான ஆட்டத்தை திறம்பட பயன்படுத்திக் கொள்ளும் என்று நம்பப்படுகிறது.
இந்தப் போட்டியை முடித்துக் கொண்டு டாக்காவுக்குப் புறப்பட்டுச் செல்கிறது அர்ஜென்டீனா. அங்கு செப்டம்பர் 6ம் தேதி நைஜீரியாவுடன் மோதுகிறது.
இரவு 7 மணிக்குப் போட்டி தொடங்குகிறது. இரு நாட்டு அணிகள் விவரம்:
அர்ஜென்டீனா: கோல்கீப்பர்கள் செர்ஜியோ ரோமீரோ, எஸ்டேபன் அன்ட்ரடா, மரியானோ அன்டுஜார்
மார்ட்டின் டெமிசெலிஸ், பெடரிகோ பெர்னாண்டஸ், நிக்கோலஸ், புர்டிஸோ, நிக்கோலஸ் ஒடமென்டி, பாப்லோ ஜெபலேட்டா, நிக்கோலஸ், பரேஜா, மார்கஸ் ரோஜோ, ஏஞ்செல் டி மரியா, ஜேவியர் மஸ்செரன்கோ, எவர் பனேகா, ரிக்கார்டோ அல்வாரஸ், பேபியன் ரினால்டோ, ஜோனஸ், குட்டிரஸ், ஜேவியர் பேஸ்டோர், லூயிஸ் கோன்சாலஸ், ஜோஸ் சோசா, கான்சாலோ ஹிகுயன், லியோனல் மெஸ்ஸி, எடுவார்டோ சால்வியோ, செர்ஜியோ அகுரா.
வெனிசூலா:
கோல்கீப்பர்கள் - ரபேல் ரோமோ, ரென்னி வேகா, டேணியல் ஹெர்னாண்டஸ்.
ஆண்டிரஸ் டுனஸ், ஓஸ்வால்டோ விஸ்காரன்டோ, சீசர் கோன்சாலஸ், ரொபர்டோ ரோசாலஸ், ரோல்ப் பெல்ட்சர், பெர்னாண்டோ அமோர்பியட்டா, ரோஹல், பிரிசென்கா, ஜோசப் மார்ட்டினஸ், பிராங்கோ சிக்னோரல்லி, ஜோஸ்மர் ஜாம்பிரானோ, தாமஸ் ரிங்கான், யோஹன்டிரி ஓராஸ்கோ, ரால் கான்சாலஸ், காபிரியல் சிசெரோ, ஜூவான் அரங்கோ, பிராங்க் பெல்ட்ச்சர், ஜூலியோ ஆல்வாரஸ், லூயிஸ் மானுவல் செய்ஜாஸ், நிக்கோலஸ் பெடர், சாலமோன் ராண்டான், மரியா ராண்டான்.
நடுவர் - ஏ.ரோவன், உதவி நடுவர்கள் - பிப்லாப் போடர், திணேஷ் நாயர், பிராங்கி பெர்னாண்டஸ். நான்காவது நடுவர் பிரதாப் சிங்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:49 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications