ஐயோ போச்சே போச்சே.... புலம்பும் ஆஸ்திரேலியா... 2-0 என பெரு வென்றது!
சோச்சி: ஃபிபா உலகக் கோப்பையில் நடந்த சி பிரிவு ஆட்டத்தில் பெரு 2-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வென்றது. இதன் மூலம் ஆஸ்திரேலியாவின் நாக் அவுட் கனவு முடிவுக்கு வந்தது. பிரான்ஸ் மற்றும் டென்மார்க் இந்தப் பிரிவில் இருந்து நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.
21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. போட்டியில் பங்கேற்கும் 32 அணிகளும் தலா 4 அணிகள் என 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற மூன்று அணிகளுடன் விளையாடும்.
அதன்படி ஒவ்வொரு அணியும் இரண்டு ஆட்டங்களை முடித்துள்ளன. ஏ பிரிவில் இருந்து ரஷ்யா, உருகுவே, பி பிரிவில் இருந்து ஸ்பெயின், போர்ச்சுகல், சி பிரிவில் இருந்து பிரான்ஸ், டி பிரிவில் இருந்து குரேஷியா, ஜி பிரிவில் இருந்து பெல்ஜியம், இங்கிலாந்து ஆகியவை ஏற்கனவே அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
பிரிவு சுற்றில் மூன்றாவது ஆட்டங்கள் துவங்கியுள்ளன. சி பிரிவில் இன்று நடந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா பெருவை சந்தித்தது. மற்றொரு ஆட்டத்தில் பிரான்ஸ், டென்மார்க் மோதின.

முதல் ஆட்டத்தில் தோல்வி
சி பிரிவில் நடந்த முதல் ஆட்டத்தில் பிரான்ஸ் 2-1 என ஆஸ்திரேலியாவை வென்றது. டென்மார்க் 1-0 என பெருவை வென்றது. அதற்கடுத்து நடந்த டென்மார்க், ஆஸ்திரேலியா இடையேயான ஆட்டம் டிராவில் முடிந்தது. பிரான்ஸ் 1-0 என பெருவை வென்றது.

ஆஸிக்கு 1 புள்ளி
இதன் மூலம் 2 வெற்றிகளைப் பெற்ற பிரான்ஸ் 6 புள்ளிகளுடன் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. இரண்டு தோல்விகளை சந்தித்த பெரு வெளியேறியது. டென்மார்க் 4 புள்ளிகளுடனும், ஆஸ்திரேலியா 1 புள்ளியுடனும் இருந்தன.

நாக் அவுட் கனவு
இந்த நிலையில் இன்று நடந்த சி பிரிவின் கடைசி லீக் ஆட்டங்களில் ஆஸ்திரேலியா பெருவை சந்தித்தது. இந்த ஆட்டத்தில் வென்றால் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு கிடைக்கலாம் என்ற நிலையில் ஆஸ்திரேலியா களமிறங்கியது. ஆட்டத்தின் துவக்கத்தில் இருந்தே ஆஸ்திரேலியா சிறப்பாக விளையாடியது. ஆனால், பெரு அதைவிட சிறப்பாக விளையாடியது.

வெளியேறியது ஆஸி
ஆஸ்திரேலியா அணியிடமே 58 சதவீத நேரம் பந்து இருந்தது. ஆனால், கிடைத்த வாய்ப்புகளை கோலாக்குவதில் ஆஸ்திரேலியா தடுமாறியது. இந்த ஆட்டத்தின் முடிவினால் எந்தப் பலனும் இல்லை என்ற நிலையில் இருந்த பெரு, சர்வ சாதாரணமாக விளையாடியது. ஆட்டத்தின் 18வது நிமிடத்தில் கேரிலோ, 51வது நிமிடத்தில் குரேரோ கோலடிக்க பெரு 2-0 என வென்றது. அதனால், ஆஸ்திரேலியாவும் வெளியேறுகிறது. சி பிரிவில் இருந்து டென்மார்க் மற்றும் பிரான்ஸ், நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.


Click it and Unblock the Notifications