பலோன் டி'ஓர் 2025: வரலாறு படைத்த உஸ்மான் டெம்பேலே.. ஹாட்ரிக் சாதனை செய்த ஐடானா பொன்மாட்டி
பாரிஸ்: கால்பந்து உலகில் மிக உயரிய மற்றும் மதிப்புமிக்க விருதாகக் கருதப்படும் பலோன் டி'ஓர் விருது வழங்கும் விழா, பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள தியேட்டர் டு சாட்லெட் அரங்கில் நேற்று (செப்டம்பர் 22) கோலாகலமாக நடைபெற்றது. இது 69வது பலோன் டி'ஓர் விழாவாகும். ஒவ்வொரு ஆண்டும் கால்பந்து உலகில் தனித்துவமான திறமையை வெளிப்படுத்தி, ஆட்டத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய வீரர், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களைக் கவுரவிக்கும் இந்த விழாவுக்காக உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
இந்த ஆண்டுக்கான ஆடவர் பிரிவில், பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைன் (பிஎஸ்ஜி) மற்றும் பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரரான உஸ்மான் டெம்பேலே, பார்சிலோனாவின் இளம் வீரர் லாமின் யமாலை பின்னுக்குத் தள்ளி, தனது முதல் பலோன் டி'ஓர் விருதை வென்று வரலாறு படைத்தார்.

பிஎஸ்ஜி அணி முதன்முறையாக யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக் பட்டத்தை வென்றதில் டெம்பேலேயின் பங்கு மிக முக்கியமானதாக இருந்தது. இறுதிப் போட்டியில் இன்டர் மிலன் அணியை 5-0 என்ற கோல் கணக்கில் பிஎஸ்ஜி வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
மகளிர் பிரிவில், பார்சிலோனா வீராங்கனை ஐடானா பொன்மாட்டி, தொடர்ந்து மூன்றாவது முறையாக பலோன் டி'ஓர் விருதை வென்று சாதனை படைத்தார். இதன் மூலம்,லியோனல் மெஸ்ஸி மற்றும் மைக்கேல் பிளாட்டினிக்குப் பிறகு, ஹாட்ரிக் பலோன் டி'ஓர் விருது வென்ற மூன்றாவது நபர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
பலோன் டி'ஓர் 2025 முழு வெற்றியாளர் பட்டியல்:
- ஆடவர் பலோன் டி'ஓர்: உஸ்மான் டெம்பேலே (பிஎஸ்ஜி)
- மகளிர் பலோன் டி'ஓர்: ஐடானா பொன்மாட்டி (பார்சிலோனா)
- கோபா டிராபி (சிறந்த இளம் வீரர்): லாமின் யமால்
- கோபா டிராபி (சிறந்த இளம் வீராங்கனை): விக்கி லோபஸ்
- யாஷின் டிராபி (சிறந்த கோல்கீப்பர் - ஆண்கள்): கியான்லூகி டோனருமா
- யாஷின் டிராபி (சிறந்த கோல்கீப்பர் - பெண்கள்): ஹன்னா ஹாம்ப்டன்
- ஜோஹன் கிரைஃப் விருது (சிறந்த பயிற்சியாளர் - ஆண்கள்): லூயிஸ் என்ரிக்
- ஜோஹன் கிரைஃப் விருது (சிறந்த பயிற்சியாளர் - பெண்கள்): சரினா வீக்மேன்
- கெர்ட் முல்லர் விருது (சிறந்த ஸ்டிரைக்கர்): விக்டர் கியோகெரஸ் மற்றும் ஈவா பஜோர்
- ஆண்டின் சிறந்த கிளப் (ஆண்கள்): பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைன் (பிஎஸ்ஜி)
- ஆண்டின் சிறந்த கிளப் (பெண்கள்): அர்செனல்
- சாக்ரடீஸ் விருது (சமூக சேவை): ஜானா அறக்கட்டளை


Click it and Unblock the Notifications