சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார் பைசுங் பூதியா

கடந்த 16 ஆண்டுகளாக இந்திய கால்பந்து அணியின் அசைக்க முடியாத சொத்தாகவும், கேப்டனாவும் செயல்பட்டு வந்தவர் சிக்கிமைச் சேர்ந்த பூதியா. கடந்த ஆண்டு அவர் காயமுற்றார். இதையடுத்து சரிவர ஆட முடியாத நிலையில் இருந்தார். தற்போது அவர் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இனிமேல் தான் உருவாக்கியுள்ள ஐக்கிய சிக்கிம் கால்பந்து கிளப்புக்காக மட்டுமே ஆடப் போவதாக அவர் அறிவித்துள்ளார்.
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக கால்பந்து ஆடி வந்தவர் பூதியா. 34 வயதாகும் பூதியா, கோலடிப்பதில் அருமையான வீரர். தனது ஓய்வு முடிவை அகில இந்திய கால்பந்து சம்மேளன அலுவலகத்தில் வைத்து செய்தியாளர்களிடம் தெரிவித்தார் பூதியா.
அப்போது அவர் கூறுகையில், கடந்த 16 ஆண்டுகளாக சர்வதேச கால்பந்துப் போட்டிகளில் நான் நிறைய அனுபவத்தைப் பெற்றேன். அருமையான காலகட்டம் இது. இதை என்றுமே என்னால் மறக்க முடியாது. ஒவ்வொரு தருணத்தையும் நான் ரசித்து அனுபவித்துள்ளேன். நாட்டுக்காக பங்கேற்ற ஒவ்வொரு போட்டியும் சிறப்பானது. இது எனக்குப் பெருமையாகவும் உள்ளது என்றார் பூதியா.
ஓய்வுக்குப் பின்னர் என்ன செய்யப் போகிறீர்கள் என்ற கேள்விக்கு, எனது அணிக்காக ஆடப் போகிறேன். அதேசமயம், இந்திய கால்பந்துக்கு எனது ஆலோசனகள் எப்போதும் உண்டு. இந்திய கால்பந்து சம்மேளனத்திற்கு உதவ எப்போதும் நான் தயார் என்றார்.
கடந்த ஜனவரி மாதம் கத்தாரில் நடந்த ஆசிய கால்பந்து கோப்பைப் போட்டியின்போது காயத்தால் அவதிப்பட்ட பூதியா, கால் மணி நேரம் மட்டுமே ஆடினார். அன்று முதலே அவர் ஓய்வு முடிவை எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
ஐ.எம்.விஜயனுக்குப் பின்னர் இந்திய கால்பந்து அணியின் நட்சத்திரமாக ஜொலித்தவர் பூதியா. தற்போது அவர் ஓய்வு பெறுவதின் மூலம் இந்திய கால்பந்து வரலாற்றில் ஒரு அத்தியாயம் முடிவுக்கு வருகிறது என்று கூறலாம்.
Story first published: Thursday, May 31, 2012, 17:33 [IST]
Other articles published on May 31, 2012


Click it and Unblock the Notifications