நைஸ் தாக்குதல் எதிரொலி... ரியோ ஒலிம்பிக்கிற்கு கூடுதல் பாதுகாப்பு... பிரேசில் அரசு முன்னெச்சரிக்கை
ரியோ டி ஜெனிரோ: பிரான்ஸ் நாட்டில் தீவிரவாதிகள் அதிரடி தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ள பிரேசில் நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரான்ஸ் நாட்டின் நைஸ் நகரில் மக்கள் அதிகமாக கூடியிருந்த பகுதியில் தீவிரவாதிகள் லாரி மூலம் தாக்குதல் நடத்தினர். இதில் அப்பாவி மக்கள் 84 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.
இந்தத் தாக்குதல் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதே போன்று பல நாடுகளில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என அச்சம் நிலவுகிறது.

ஒலிம்பிக்...
இந்த சூழ்நிலையில் அடுத்தமாதம் பிரேசில் நாட்டில் ரியோ டி ஜெனிரோ நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. எனவே, அங்கும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த முயற்சிக்கலாம் என்ற பீதி உள்ளது.

கூடுதல் பாதுகாப்பு...
இதனால், அங்கு பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது அந்நாட்டு அரசு. விளையாட்டு போட்டி நடக்கவுள்ள நகரின் பல இடங்களில் சோதனை சாவடிகள் மற்றும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. 85,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஆலோசனை...
பிரேசிலின் தற்காலிக அதிபர் மைக்கேல் டெமர், தனது கேபினட் அமைச்சர்கள் மற்றும் உளவுத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

85000 போலீசார்...
இந்த கூட்டத்துக்கு பிறகு பிரேசிலின் உளவுத்துறை தலைவர் செர்ஜியோ எட்சிகோயன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "நைஸ் நகரில் நடந்த தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து ஒலிம்பிக் போட்டிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியில் 85 ஆயிரம் போலீஸாரும், ராணுவ வீரர்களும் ஈடுபடுத்தப்படுவார்கள்.

சோதனைச்சாவடி...
தீவிரவாத தாக்குதலை ஒடுக்குவது தொடர்பான பாதுகாப்பு ஒத்திகையில் அவர்கள் ஈடுபடுவார்கள். பல இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு ரசிகர்கள் கண்காணிக்கப்படுவார்கள். இதற்கு ரசிகர்களும் ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும்" என்றார்.

ஒலிம்பிக் ஜோதி...
இதனிடையே பலத்த பாதுகாப்புடன் பிரேசிலின் நகர் ஒன்றுக்கு நேற்று ஒலிம்பிக் ஜோதி ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. அப்போது மர்ம நபர் ஒருவர் தீயணைப்பு கருவியால் ஒலிம்பிக் ஜோதியை அணைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கலக்கம்...
ஏற்கனவே, ஜிக்கா வைரஸ் பீதியில் ஒலிம்பிக் போட்டிக்கு பங்கேற்பாளர்களும், பார்வையாளர்களும் எதிர்பார்த்த அளவில் வருவார்களா என்ற சந்தேகம் உள்ளது. இந்நிலையில், தீவிரவாதிகளின் தாக்குதல் பீதியும் சேர்ந்து கொண்டதால் பிரேசில் அரசு கலக்கத்தில் உள்ளது.


Click it and Unblock the Notifications