உலகக்கோப்பையில் கலக்கிய கேப் வெர்டே வீரர்களுக்கு மொத்த நாடே திரண்டு வந்து பெரும் வரவேற்பு
பிரையா: ஃபிஃபா உலகக்கோப்பை 2026 கால்பந்து தொடரில் வரலாற்றுச் சாதனை படைத்து நாடு திரும்பிய கேப் வெர்டே அணி வீரர்களுக்கு, அந்த நாட்டின் தலைநகரான பிரையாவில் பெருமளவில் ரசிகர்கள் கூடி உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். வெறும் 5 லட்சம் மட்டுமே மக்கள் தொகை கொண்ட அந்த சிறிய நாடு கால்பந்து உலகக்கோப்பையில் அபாரமாக ஆடியது பலரையும் கவர்ந்தது.
மேற்கு ஆப்பிரிக்க கடற்கரையில் உள்ள 10 எரிமலைத் தீவுகளைக் கொண்ட கேப் வெர்டே நாட்டின் மக்கள் தொகை வெறும் 5 லட்சமாகும். இந்த நூற்றாண்டின் தொடக்கம் வரை உலகக்கோப்பை தகுதிச் சுற்றில் கூட விளையாடாத இந்த நாடு, தற்போதைய உலகக்கோப்பையின் நாக்கவுட் சுற்றுக்கு முன்னேறிய மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட நாடு என்ற புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்தது குறிப்பிடத்தக்கது.

தனது முதல் கால்பந்து உலகக்கோப்பையில் அறிமுக அணியாக ஆடிய கேப் வெர்டே, ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில் பலம் வாய்ந்த அர்ஜென்டினா அணிக்கு எதிராகக் கூடுதல் நேரம் வரை மிகக் கடுமையாகப் போராடி 3-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. தோல்வியடைந்த போதிலும், தங்களது அசாத்திய ஆட்டத்தால் உலக ரசிகர்களின் இதயங்களை வென்ற கேப் வெர்டே வீரர்கள் ஞாயிற்றுக்கிழமை சொந்த நாடு திரும்பினர்.
அவர்களை வரவேற்க பிரையா விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் தேசியக் கொடியுடன் காத்திருந்தனர். அங்கிருந்து திறந்தவெளி டிரக்கில் வீரர்கள் 'கியூப்ரா கனேலா' கடற்கரைக்கு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். குறிப்பாக, ஜூலை 5 கேப் வெர்டே நாட்டின் சுதந்திர தினம் என்பதால், அங்கு திருவிழா போன்ற சூழல் நிலவியது. "ஒப்ரிகாடோ" (நன்றி) என்ற வாசகங்களுடன் மாற்று வீரர்கள், பயிற்சியாளர் புபிஸ்டா மற்றும் வீரர்கள் இசையின் தாளத்திற்கு ஏற்ப மேடையில் நடனமாடினர். சமூக வலைதளங்களின் மூலம் பிரபலமான அந்த அணியின் கோல்கீப்பர் வோசின்ஹாவும் ரசிகர்களை நோக்கி உற்சாகக் குரல் எழுப்பினார்.


Click it and Unblock the Notifications
