பரபரப்பான ஐ.எஸ்.எல். கால்பந்து இறுதி போட்டி: கோவாவை வீழ்த்தி சென்னை சாம்பியன் பட்டம் வென்றது!
பனாஜி: ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர் இறுதிப் போட்டியில் சென்னை எஃப்சி அணி கோவா அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. கடைசி நிமிடங்களில் கோவா கோல்கீப்பர் காட்டிமணி சேம்சைடு கோல் அடித்து சென்னையின் வெற்றிக்கு வித்திட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து எனப்படும் ஐ.எஸ்.எல். போட்டிகள் கடந்த அக்டோபர் 3-ந் தேதி சென்னையில் தொடங்கியது. இந்த தொடரில் 8 அணிகள் பங்கேற்றிருந்தன.
இறுதிப் போட்டிக்கு சென்னையின் எஃப்சி அணியும் கோவா அணியும் தகுதி பெற்றன. கோவா மாநிலம் படோர்டா மைதானத்தில் நேற்று இறுதிப் போட்டி நடைபெற்றது.

முதல் பாதியில் கோல் இல்லை
இந்த போட்டியின் தொடக்கம் முதல் பெரும் பரப்பரப்ப்பு இருந்தது வந்தது. ஆனால் முதல் பாதியில் இரு அணியினருமே கோல் அடிக்காமல் இருந்தனர்.

பரபரப்பான கடைசி நிமிடங்கள்
2வது பாதியிலும் 54 நிமிடங்கள் யாரும் கோல் அடிக்கவில்லை. அப்போது அதாவது 54வது நிமிடத்தில் சென்னை வீரர் மெண்டோசாவை கோவா வீரர்கள் தடுத்தனர். இதனைத் தொடர்ந்து சென்னை அணிக்கு பெனால்டிக் வாய்ப்பு வழங்கப்பட்டது.

விடாது கருப்பு புருனோ
சென்னையின் புருனோ அடித்த பந்தை சூப்பராக கோவாவின் கோல் கீப்பர் தடுத்தார். ஆனால் விடாது கருப்பாக புருனோ பந்தை கோல் போஸ்ட்டுக்குள் அடித்து சென்னை அணியை முன்னிலைக்கு நகர்த்தினார்.

கோவா திடீர் முன்னிலை
இதனால் கோல் போட்டாக வேண்டிய கட்டாயத்துக்கு கோவா போனது. அடுத்த நிமிடத்திலேயே கோவா கோலடித்தது. பின்னர் 59-வது நிமிடத்தில் சென்னைக்கு மீண்டும் ஒரு பெனால்டிக் வாய்ப்பு கிடைத்து. ஆனால் அது கோலாக மாறவில்லை.
இரு அணிகளும் தலா 1 கோலுடன் சமமாக இருந்தன. 88வது நிமிடத்தில் மைதானம் மீண்டும் பரபரப்பானது. கோவா அணி கோல் அடித்து 2-1 என முன்னிலை பெற்றது. இதனால் கோவா வெல்வது உறுதி என ரசிகர்கள் ஆராவாரத்தில் ஈடுபட்டனர்.

சென்னைக்கு சேம்சைடு கோல்
ஆனால் 90-வது நிமிடத்தில் சென்னை வீரர் அடித்த பந்தை தடுக்க முயன்ற கோவா கோல்கீப்பர் காட்டிமணி சேம்சைடு கோலாக்க இரு அணிகளும் 2-2 என்ற சமநிலைக்கு வந்தன.

சென்னை சாம்பியன்
பின்னர் அடுத்த வினாடிகளிலேயே சென்னை வீரர் மெண்டோஸா மேலும் ஒரு கோல் அடித்தார். இதனால் சென்னை அணி 3-2என முன்னிலை வகித்தது.
இதனைத் தொடர்ந்து கூடுதலாக வழங்கப்பட்ட வாய்ப்பில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனால் சென்னை அணி 3-2 கோல் கணக்கில் கோவாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.


Click it and Unblock the Notifications