மீண்டும் முதலிடத்தைப் பிடித்த சென்னையின் எப்சி மச்சான்கள்
சென்னை: இந்தியன் சூப்பர் லீக் போட்டியின் லீக் ஆட்டத்தில் புனே சிட்டிக்கு எதிரான ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் வென்று, முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்சி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை மீண்டும் பிடித்தது.
ஐஎஸ்எல் எனப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் நான்காவது சீசன் நடந்து வருகிறது. 2வது சீசனின் சாம்பியனான சென்னையின் எப்சி தனது 10வது ஆட்டத்தில் புனே சிட்டி அணியுடன் விளையாடியது.

சென்னயில் நடந்த இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக்க தவறிய சென்னையின் எப்சி, 83வது நிமிடத்தில் கிரிகோரி நெல்சனின் கோலால் 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது.
இதன் மூலம், இதுவரை 8 முறை இரு அணிகளும் நேரடியாக மோதியுள்ள போட்டிகளில் புனே சிட்டி ஒன்றில் கூட வென்றதில்லை என்ற நிலை தொடர்கிறது. மேலும், 10 போட்டிகளில் 20 புள்ளிகளைப் பெற்று, புள்ளிப் பட்டியலில் சென்னையின் எப்சி முதலிடத்தைப் பிடித்தது. பெங்களூரு எப்சி 18 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. புனே சிட்டி 16 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
முக்கிய வீரர் மார்சலினோ விளையாடாதது புனே அணியின் ஆட்டத்தில் வெளிப்படையாக தெரிந்தது. முதல் பாதியில் மூன்று முறை கோலடிக்கும் வாய்ப்பு கிடைத்தும் அதை புனே சிட்டி இழந்தது.
இந்த வாய்ப்புகளை தடுத்து நிறுத்தியதுடன், கடந்த இரண்டு ஆட்டங்களைப் போல கடைசி நேரத்தில் கோலடித்து டிரா செய்ய எதிரணிகளுக்கு வாய்ப்பு கொடுத்த தவறை செய்யாமல் தவிர்த்தது சென்னையின் எப்சி.
வரும் 19ம் தேதி நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியுடன் சென்னையின் எப்சி மோத உள்ளது.
Story first published: Monday, January 15, 2018, 16:54 [IST]
Other articles published on Jan 15, 2018


Click it and Unblock the Notifications