சூப்பர் மச்சான்ஸ் முதலிடத்தைப் பிடித்தனர்… ஆனாலும்!
சென்னை: இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 1-1 என்ற டிரா செய்து, புள்ளிப் பட்டியலில் சென்னையின் எப்சி முதலிடத்தைப் பிடித்தது. ஆனாலும் வெற்றி பெறும் வாய்ப்பை இழந்ததால், 2 புள்ளிகளையும் இழந்தது.
ஐஎஸ்எல் எனப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் நான்காவது சீசன் நடந்து வருகிறது. இந்த சீசனில், சென்னையின் எப்.சி., அணி, லீக் சுற்றில் முதல் ஆட்டத்தில் கோவாவிடம் 3-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.

அதற்கடுத்த ஆட்டங்களில், நார்த்ஈஸ்ட் யுனைடெட் எப்சி அணியை 3-0 என்ற கோல் கணக்கிலும், புனே சிட்டி அணியை 1-0 என்ற கோல் கணக்கிலும், கோல்கத்தாவின் ஏடிகே அணியை 3-2 என்ற கோல் கணக்கிலும் வென்றது.
தொடர்ந்து 3 ஆட்டங்களில் வெற்றி என்ற நிலையில், மும்பை சிட்டி அணியிடம் 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. அடுத்ததாக, பெங்களூரு எப்சி அணியை 2-1 என்ற கோல் கணக்கி்ல் வென்றது. கேரளா பிளாஸ்டர்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடந்த ஆட்டத்தில் 1-1 என்ற கோல் கணக்கில் சென்னையின் எப்சி டிரா செய்தது.
கிரிக்கெட்டில் சூப்பர் பினிஷரான தல டோணியின் அணியான சென்னையில் எப்சியும் மிகச் சிறந்த பினிஷிங் அணியாக உள்ளது. கடைசி நேரத்தில் சிறப்பாக செயல்படும் அணி என்ற பெயரெடுத்துள்ளது.
கேரளாவுக்கு எதிரான போட்டியில் டிரா செய்ததன் மூலம், 7 போட்டிகளில், 4 வெற்றி, 2 தோல்வி, 1 டிராவுடன் 13 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் சென்னையின் எப்சி உள்ளது.
கோவா, பெங்களூரு, புனே அணிகள் 12 புள்ளிகளுடன் உள்ளன. கேரளா பிளாஸ்டர்ஸ் அணிக்கு எதிராக வெற்றி பெற்றிருந்தால், மேலும் 2 புள்ளிகள் கிடைத்திருக்கும்.
அடுத்ததாக, வரும் 28ல் ஜாம்ஷெட்பூர் அணியுடன் சென்னையின் எப்சி மோத உள்ளது.
Story first published: Monday, December 25, 2017, 9:00 [IST]
Other articles published on Dec 25, 2017


Click it and Unblock the Notifications