அசத்த வராங்க டோணியின் சூப்பர் மச்சான்ஸ்
சென்னை: பிபா 17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்திய கையோடு, அடுத்ததாக, ஐ.எஸ்.எல். எனப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டிகள் துவங்கியுள்ளன. 2015ல் சாம்பியன் பட்டம் வென்ற சென்னையின் எப்.சி., அணி தனது முதல் போட்டியில் கோவாவை சந்திக்கிறது.
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டிகள் நான்காவது சீசன் துவங்கியுள்ளது. இதில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கூல் டோணி, நடிகர் அபிஷேக் பச்சனின் சென்னையின் எப்.சி., அணி, 2015ல் கோப்பையை வென்று அசத்தியது.
முதல் சீசனில் அரை இறுதி வரை முன்னேறிய சென்னை அணி,, இரண்டாவது சீசனில் சாம்பியயன் பட்டத்தை வென்றது. கடந்த ஆண்டு, லீக் சுற்றில் மூன்று போட்டிகளில் மட்டுமே வென்று, புள்ளிப் பட்டியலில் 7வது இடத்தைப் பிடித்தது.

5 மாதங்கள் நடக்கும் போட்டி
பெங்களூரு மற்றும் ஜாம்ஷெட்பூர் அணிகளும் இணைய, தற்போது நடக்கும் நான்காவது சீசனில் மொத்தம், 10 அணிகள் மோத உள்ளன. மொத்தம் 108 நாட்களில் 90 போட்டிகள் என, முதல் சுற்று லீக் ஆட்டங்கள் நடக்க உள்ளன. அதன் பிறகு, பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் நடக்க உள்ளன. அடுத்தாண்டு மார்ச் 17ல் பைனல் நடக்க உள்ளது.

சென்னை அணி சாதனை
ஐஎல்எஸ் போட்டிகளில், சென்னை அணி 47 போட்டிகளில் 79 கோல்கள் அடித்து, அதிக கோல்கள் அடித்த அணியாக உள்ளது. அதேபோல் அதிக வெற்றிகள் பெற்ற அணிகள் பட்டியலில் கோல்கத்தாவும், சென்னையும் முதலிடத்தில் உள்ளன.

கிலியை ஏற்படுத்தும் வீரர்கள்
புதிய பயிற்சியாளரான ஜான் கிரிகோரியின் அனுபவம், சென்னைக்கு வலுசேர்க்கும். சென்னை அணிக்கு மிகப் பெரிய பலம், வெளிநாட்டு வீரர்களை சேர்த்து கொண்டதுதான். மெய்ல்சன் ஆல்வஸ், கேப்டன் ஹென்ரிக் செரினோ ஆகியோர் அணியில் இருப்பதே எதிரணிக்கு கிலியை ஏற்படுத்தும்.

முதல் முறையாக தமிழக வீரர்
நடுகளம், முன்களம், தடுப்பாட்டம் என அனைத்துப் பிரிவிலும் இடம்பெற்றுள்ள வீரர்களை தனித்தனியாக பார்க்கும்போது, அவர்கள் அனைவரும் ஒன்மேன் ஆர்மிகள். முதல் முறையாக உள்ளூரைச் சேர்ந்த தனபால் கணேஷ் களமிறங்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர் உதையின் ராஜாவாக கருதப்படுகிறார்.

எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இளம் வீரர்கள்
19 வயதாகும் அனிருத் தாபா, இந்த சீசனில் கவனிக்கப்பட வேண்டிய வீரராக உள்ளார். அவர் அனைத்து வயதுப் பிரிவிலும் இந்திய அணிக்காக விளையாடியவர். அதே போல், இளம் வீரர்களான ஜெர்ரி லால்ரின்ஜூவாலா, கெர்மான்பிரீத் சிங் ஆகியோர் வேகத்தில் மிரட்ட உள்ளனர்.
ஒட்டுமொத்தமாக, சிறந்த வெளிநாட்டு, உள்நாட்டு வீரர்களின் தேர்வு மிகச் சிறப்பாக அமைந்துள்ளது, சென்னை சூப்பர்மச்சான்ஸ்களுக்கு சாதகமாகவே உள்ளது. கேப்டன் கூல் டோணியின் அணி, கடந்த முறை செய்த தவறுகளை செய்யாமல் வெற்றிகளை குவிக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

யார் யார் அணியில்
சென்னை அணியின் வீரர்கள்:
கோல்கீப்பர்கள் - கரண்ஜித் சிங், ஷாகின்லால் மெலோலி, பவண் குமார். தடுப்பாட்டக்காரர்கள் - ஹென்ரிக் செரினோ (கேப்டன்), இனிகோ கால்டரான், மெய்ல்சன் ஆல்வஸ், ஜெர்ரி லால்ரின்ஜூவாலா, தனசந்திர சிங், புல்காங்கோ கார்டோசோ, சஞ்சய் பால்முசு, கீனான் அல்மீடா.
நடுகள ஆட்டக்காரர்கள் - ரபேல் அகஸ்டோ, ஜெய்மி கேவிலன், ரீனே மிக்கேலிக், தோய் சிங், பிக்ரம்ஜித் சிங், தனபால் கணேஷ், கெர்மான்பிரீத் சிங், பிரான்சிஸ் பெர்னான்டஸ், அனிருத் தாபா. முன்கள வீரர்கள் - கிரிகோரி நெல்சன், ஜூட் நூரோ, ஜீஜோ லால்பெகுலா, முகமது ரபி, பாவ்ரிங்டாவ் போடோ.

சென்னை பங்கேற்கும் போட்டி
சென்னையின் எப்.சி., நாளை நடக்கும் முதல் ஆட்டத்தில் கோவாவை சந்திக்கிறது. அதன்பிறகு சென்னை அணி பங்கேற்கும் போட்டிகள்: நவ. 23-வடகிழக்கு, டிச.3-புனே, டிச. 7- கோல்கத்தா, டிச.10-மும்பை, டிச. 17-பெங்களூரு, டிச. 22- கோவா, டிச. 28-ஜாம்ஷெட்பூர்.
2018 ஜன. 13- புனே, ஜன. 19- வடகிழக்கு, ஜன. 25-கோல்கத்தா, ஜன. 31-பெங்களூரு, பிப். 11 -டில்லி, பிபி. 15- கோவா, பிப். 18 - ஜாம்ஷெட்பூர், பிப். 23- கேரளா, மார்ச் 3- மும்பை


Click it and Unblock the Notifications