செம்ம டைமிங்.. நெருப்பை பற்றவைத்த ரொனால்டோ, மெஸ்ஸி.. ஃபிபா உலகக்கோப்பைக்கு எகிறிய எதிர்பார்ப்பு!
தோஹா: ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ள நிலையில், மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ இருவரும் ஒன்றாக செஸ் விளையாடும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
பீலே, மரடோனா, குரைஃப், ரொனால்டினோ, டேவிட் பெக்காம் உள்ளிட்ட ஜாம்பவான்களுக்கு பின் சம காலத்தில் கால்பந்தின் தூதுவர்களாக லயோனல் மெஸ்ஸியும், கிறிஸ்டியானோ ரொனால்டோவும் செயல்பட்டு வருகின்றனர்.
சிறுவயதில் தொடங்கி 16 ஆண்டுகளுக்கும் மேலாக கால்பந்தில் தனி மனிதர்களாக ஆதிக்கம் செலுத்தி வரும் இருவருக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதேபோல் இருவருமே நெருங்கிய நட்பில் இல்லையென்றாலும், இருவரும் பரஸ்பர மரியாதையை பொதுவெளியில் வெளிப்படுத்துவர்.

மெஸ்ஸி - ரொனால்டோ
களத்திற்கு வெளியே பெரியளவில் மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ சந்தித்துக் கொள்ளாத நிலையில், முதல்முறையாக இருவரும் ஒரே போட்டோஷூட்டில் பங்கேற்றுள்ளது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த புகைப்படத்தில் மெஸ்ஸி, ரொனால்டோ இருவரும் ஒன்றாக அமர்ந்து செஸ் விளையாடுவது போல் உள்ளனர்.

ரசிகர்கள் உற்சாகம்
உலகக்கோப்பை கால்பந்து தொடர் இன்று மாலை தொடங்க உள்ள நிலையில், இருவரின் புகைப்படமும் ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் மெஸ்ஸி விளையாடி வரும் அர்ஜென்டினா அணியும், ரொனால்டோ விளையாடி வரும் போர்ச்சுகல் அணியும் மோத வாய்ப்பு இருக்கிறதா என்று தேட தொடங்கியுள்ளனர்.

நேருக்கு நேர் மோதல்?
ஆனால் குரூப் பிரிவில் அர்ஜென்டினா அணி குரூப் சி பிரிவிலும், போர்ச்சுகல் குரூப் எச் பிரிவிலும் இடம்பெற்றுள்ளன. இதனால் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதும் வாய்ப்பு நாக் அவுட் சுற்றில் உருவாக வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் இருவருக்கும் இந்த உலகக்கோப்பை தொடரே கடைசி உலகக்கோப்பை தொடராக இருக்க வாய்ப்புள்ளது.

எகிறும் எதிர்பார்ப்பு
அதனால் மெஸ்ஸியின் ரசிகர்கள் அர்ஜென்டினா அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்றும், ரொனால்டோ ரசிகர்கள் போர்ச்சுகல் அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்றும் பிரார்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் மெஸ்ஸி, ரொனால்டோ இருவரும் அந்த புகைப்படத்தை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்துள்ளனர். இதனால் இருவரின் ரசிகர்களும் அடுத்தடுத்து இரு அணிகள் விளையாடும் ஆட்டத்தை எதிர்பார்த்துள்ளனர்.


Click it and Unblock the Notifications